சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ரஷித் கான்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய உலக சாதனையை படைத்துள்ளார் ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் யுஏஇ - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற யுஏஇ பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி செதிகுல்லா அடல் (54 ரன்கள்), இப்ராஹிம் சத்ரன் (63 ரன்கள்) ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் அடித்தது.
பின்னர் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய யுஏஇ அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் 38 ரன்கள் வித்தியாசத்தில் யுஏஇ அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
யுஏஇ தரப்பில் முகமது வாசீம் 67 ரன்களும், ராகுல் சோப்ரா 52 ரன்களும் அடித்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் மற்றும் ஷரபுதீன் அஷ்ரப் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரஷித் கான் கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 165 ஆக உயர்ந்தது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.
முதல் இடத்தில் 165 விக்கெட்டுகளை எடுத்த ரஷித் கானும், இரண்டாவது இடத்தில் 164 விக்கெட்டுகளை வீழ்த்திய டிம் சவுதியும், 150 விக்கெட்டுகளை எடுத்த இஷ் சோதி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

