டெஸ்ட் சாம்பியன்ஷிப்: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு!

டெஸ்ட் சாம்பியன்ஷிப்: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு!
Published on

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், சிராஜ், ஷமி என நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் இடம்பெறவில்லை.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறுகிறது. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதல் இரண்டு இடங்கள் பிடித்திருக்கும் இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் மோதுவதால் ஆட்டம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் வெற்றிகளைத் தக்க வைக்க இந்திய அணியும், இந்தியாவிடம் தொடர்ந்து தோற்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஆஸ்திரேலிய அணியும் முனைப்புக்காட்டலாம் என்பதால், போட்டி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு அணிகளுக்கும் சவால் நிறைந்ததாகக் காணப்படும் ஓவல் மைதானம், இங்கிலாந்தின் மிகப் பழமையான மைதானம் ஆகும். அங்கு இதுவரை 104 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் இங்கிலாந்து அணி 43 போட்டிகளிலும், வெளிநாட்டு அணிகள் 23 போட்டிகளிலும் வென்றிருப்பதுதான் இதுவரையிலான வரலாறு.

அதேபோல், இங்கிலாந்து வானிலை என்பது மாறிக் கொண்டே இருப்பதால், அது பந்துவீச்சுக்கோ அல்லது பேட்டிங்கிற்கோ சாதகமாக இருக்குமா என்று தெரியாது. வானிலை இரண்டு அணிக்கும் உதவலாம். வானிலை எப்படி இருந்தாலும் டாஸ் வெல்வது முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில், கடந்த கால போட்டிகளில் டாஸ் வெல்லும் அணியே பேட்டிங்கை தேர்வு செய்து வெற்றியும் பெற்றுள்ளது. போட்டியின் கடைசி இரண்டு நாட்கள் பிட்ச் வறண்டுவிடுவதால், அவை சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றதாகவே இதுவரை இருந்துள்ளது. அதனால், பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடுவது சவாலானது. இங்கிலாந்தில் உள்ள மற்ற மைதானங்களின் மேற்பரப்பில் காணப்படும் ஈரப்பதம் ஓவல் மைதானத்தில் இருப்பதில்லை. வேகப்பந்து வீச்சாளருக்கு இந்த மைதானம் உகந்ததாக இதுவரை இருந்ததில்லை.

இங்கிலாந்து அணியைத் தவிர மற்ற நாடுகளுக்கு ஓவல் மைதானம் சவால் நிறைந்ததாகவே இருந்துள்ளது.  இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 2 வெற்றி, 5 தோல்வி மற்றும் 7 போட்டிகள் சமனில் முடித்துள்ளது.  ஓவல் மைதானத்தில் கடைசியாக இங்கிலாந்துடன் மோதிய இந்திய அணி, இங்கிலாந்தை 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மட்டுமே கவனிக்கத்தக்கது.

இதுவரை, ஆஸ்திரேலிய அணிக்கும் ஓவல் மைதானம் இலகுவானதாக இருந்ததில்லை. ஓவல் மைதானத்தில் 38 போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா வெறும் 7 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியா அணி 44 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டான வரலாறு எல்லாம் உண்டு.

கடந்த 2017 முதல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணி தான் வென்றுள்ளது. இதனால், இந்திய அணி ஆஸ்திரேலியை விடவும் பலமானதாகக் கருதப்படுவதால், ஆஸ்திரேலியாவுக்கு இந்த போட்டி சவால் நிறைந்ததாகத்தான் இருக்கப் போகிறது!

logo
Andhimazhai
www.andhimazhai.com