கால்பந்து: கோப்பையைத் தட்டித் தூக்கிய ஸ்பெயின்!

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஸ்பெயின் வீரர்கள்
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஸ்பெயின் வீரர்கள்
Published on

பரபரப்பாக நடைபெற்று வந்த யூரோ கோப்பை கால்பந்து தொடரை ஸ்பெயின் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக கால்பந்தாட்ட ரசிகர்களை பிஸியாகவே வைத்திருந்த யூரோ கோப்பை கால்பந்தாட்ட தொடர் நடைபெற்று முடிந்துள்ளது.

நேற்று யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் - இங்கிலாந்து அணிகள் மோதின. ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்ப முதலே அனல் பறந்தது. இரு அணிகளும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த கோலும் அடிக்கப்படவில்லை.

இதனால் இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க முனைப்புக் காட்டியது. இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய உடனே 47வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் நிக்கோ வில்லியம்ஸ் முதல் கோல் அடித்து முன்னிலை பெறச் செய்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கோல் பால்மர் கோல் அடித்து ஸ்கோரை சமன் செய்தார்.

இதனால் ஆட்டத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றியது. இந்த நிலையில் ஸ்பெயின் அணியில் சப்ஸ்டியூட் வீரராக களமிறங்கிய மைக்கேல் ஓயர்சபால் 86வது நிமிடத்தில் ஒருகோல் அடித்தார். இந்த கோலால் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் மீண்டும் முன்னிலைப் பெற்றது. ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் இங்கிலாந்து அணி கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தது.

ஆனால் அவற்றையெல்லாம் ஸ்பெயின் அணி முறியடித்து 2 – 1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ஸ்பெயின் அணி நான்காவது முறையாக யூரோ கோப்பையைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதன் மூலம் இங்கிலாந்தின் 58 ஆண்டுகாலக் கால்பந்துக் கனவு மீண்டும் பலிக்காமல் போயிருக்கிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com