டி20 உலகக் கோப்பை: போராடி தோற்ற அமெரிக்கா... உலக சாதனை படைத்த இந்தியா!

இந்திய அணி வீரர்கள்
இந்திய அணி வீரர்கள்
Published on

டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பதிவு இந்திய அணி புதிய உலக சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறது.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3ஆவது ஆட்டத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற அமெரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா , இஷான் கிஷான் களமிறங்கினர். தொடக்கத்தில் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் அமெரிக்கா அணியின் சிறப்பான பந்த்துவீச்சால் இஷான் கிஷான் 20 ரன்களும், திலக் வர்மா 25 ரன்களும் , ஷிவம் துபே டக் அவுட் ஆனார்.

பின்னர் ரிங்கு சிங் , ஹர்திக் பாண்டியா 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அக்சர் படேல் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுபுறம் சூர்யகுமார் யாதவ் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் அரைசதமடித்து அசத்தினார்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 84 ரன்கள் எடுத்தார். அமெரிக்கா அணியில் ஷாட்லி வான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து, 162 ரன்கள் என்ற இலக்குடன் அமெரிக்கா களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், மிலிந்த் குமார் மற்றும் சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி ஜோடி சற்று நிதானமாக ஆடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் மிலிந்து குமார் 34 ரன்களில் அவுட் ஆனதை தொடர்ந்து, அடுத்து வந்த சுபம் ரன்ஜனேவுடன் சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி ஜோடி சேர்ந்தார்.

ரிங்கு சிங் பந்துவீச்சில் சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 37 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சுபம் ரன்ஜனே 37 ரன்களில் எல்.பி.டபில்யூ. முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர்.

இறுதியில் அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி உலக சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறது.

2024 ஆம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ச்சியாக இறுதிப்போட்டியுடன் சேர்த்து 8 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றிருந்தது. 2026 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பெற்ற வெற்றியின் மூலம், இந்திய அணி தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவின் எட்டு வெற்றிகளுடன் இருந்த முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com