
நவி மும்பையில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. உலகக் கோப்பையை முதல் முறையாக வென்று கோப்பையை முத்தமிட்ட வீராங்கனைகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரூ.51 கோடி பரிசுத் தொகை அறிவித்துள்ளது. ஆடவர் அணிக்கு இணையாக இந்தப் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஐசிசி உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு சுமார் 40 கோடி பரிசுத் தொகை வழங்குவதும் குறிப்பிடத்தக்கது.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தனது முதல் உலகக் கோப்பை பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. நீண்ட காலமாக இந்தியாவின் மகளிர் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த வெற்றி, இந்திய விளையாட்டு வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் ஒரு மைல்கல் நிகழ்வாக மாறியுள்ளது.
இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் குவித்தது. அதிரடி தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 78 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஸ்மிருதி மந்தனா 45 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை வழங்க, ரிச்சா கோஷ் 24 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அணிக்கு உத்வேகமளித்தார். இந்த சிறப்பான பேட்டிங் செயல்பாடு, மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் இந்தியாவின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.
299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, ஒரு கட்டத்தில் வலுவான நிலையில் இருந்தது. அணித் தலைவர் லாரா வோல்வார்ட் சதம் அடித்து (98 பந்துகளில் 101 ரன்கள்) வெற்றிக்காகப் போராடினார். ஆனால், தீப்தி ஷர்மாவின் சுழல் ஜாலம் இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. வோல்வார்ட் மற்றும் சோலே ட்ரையன் ஆகியோரின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் கைப்பற்றி தென் ஆப்பிரிக்காவின் சரிவுக்குக் காரணமானார் தீப்தி. அவரது அபாரமான 5 விக்கெட் வீழ்த்தல், தென் ஆப்பிரிக்க அணியை 45.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ய வழிவகுத்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக இந்திய மகளிர் அணி கோப்பையை வென்று சாம்பியனாக மகுடம் சூடி இருக்கிறது.
இறுதிப் போட்டியில் 87 ரன்கள் அடித்து, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஷஃபாலி வர்மா, ஆட்ட நாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இத்தொடர் முழுவதும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்திய தீப்தி ஷர்மா, தொடர் நாயகி விருதை வென்றார். அவர் இத்தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, மூன்று அரை சதங்களையும் அடித்திருந்தார்.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் இந்திய அணி இந்த மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 2005 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை சென்று கோப்பையை இழந்த சோகத்திற்கு இந்த வெற்றி ஒரு ஆறுதலாக அமைந்தது. ஆசிய கண்டத்தில் இருந்து உலகக் கோப்பை வென்ற முதல் மகளிர் அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது.