பதினெட்டே வயதில் குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தைத் தட்டி வந்திருப்பதை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு ஐந்து கோடி வழங்கிப் பாராட்டியது. அவரது உலகக்கோப்பை வெற்றிக்காக சுமார் 11 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்து, அனைவரையும் மூக்கில் விரலை வைக்க வைத்தது.
2007-இல் விஸ்வநாதன் ஆனந்த் வென்ற உலக செஸ் சாம்பியன் பட்டம், 2014க்குப் பின்னர் மேக்னஸ் கார்ல்சன் வசம் பல ஆண்டுகள் இருந்தது. அதை சீன வீரர் டிங், பறித்த ஒரே ஆண்டில் குகேஷ் மீண்டும் தட்டி வந்துள்ளார்.
புகழ்பெற்ற செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்,’ விஸ்வநாதன் ஆனந்தின் இளம் படையினர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளனர்” என்று எக்ஸ் தளத்தில் குகேஷின் வெற்றிக்குப் பின்னர் எழுதினார். இதன் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் செஸ் தொடர்பாக ஆர்வத்தையும் உந்துதலையும் ஏற்படுத்தியவர் விஸ்வநாதன் ஆனந்த் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரது வெற்றி விதைத்த விதைகள்தான் இங்கே இவ்வளவு திறமையான வீரர்கள்.
ஆனந்துடன் வெஸ்ட்ப்ரிட்ஜ் என்கிற முதலீட்டு நிறுவனமும் சேர்ந்து எடுத்திருக்கிற முயற்சி, குகேஷ் போன்ற பல சாதனையாளர்களை உருவாக்க இருக்கிறது என்பதுதான் காஸ்பரோவ் சொன்னதன் காரணம். வெஸ்ட்பிரிட்ஜ் நிறுவனம் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு முதலீடுகளை நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனத்தின் முதலீட்டாளர்களிடம் கொரோனா காலத்துக்கு முன் ஒரு நாள் ஆனந்த் உரையாற்ற அழைக்கப்பட்டார். உரை முடிந்து கிளம்புகையில் வெஸ்ட்பிரிட்ஜின் இணை நிறுவனரான சந்தீப் சிங்கால், நாங்களும் செஸ் விளையாட்டுக்கு ஏதேனும் பங்களிக்கலாமா என்று கேட்டார். இதைத் தொடர்ந்து உருவானதுதான் விஸ்வநாதன் ஆனந்த் செஸ் அகாடமி.
2020 இல் உருவாக்கப்பட்ட இந்த அகாதமி இளம் செஸ் திறமையாளர்களை அரவணைத்தது. நிஹல் சாரின், பிரக்யானந்தா, குகேஷ், ரௌனக் சாத்வானி ஆகிய 14-16 வயது கொண்ட இளைஞர்களை தன் முதல் பேட்சில் சேர்த்துக் கொண்டது. பிரக்யானந்தாவின் சகோதரி வைஷாலியும் இதில் உண்டு. இவர்கள் இளம் வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் ஆனவர்கள். வைஷாலி மட்டுமே இந்த ஆண்டு இந்தியாவின் மூன்றாவது இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
இவர்கள் உள்பட்ட 17 வீரர்கள் இந்த மையத்தில் பயிற்சி பெறுகின்றனர். இதற்கு வெஸ்ட்பிரிட்ஜ் நிறுவனம் 20-25 கோடி ரூபாய் வழங்கி உள்ளதுடன் வீரர்களுக்கு ஸ்பான்சர்ஷிப்பும் வழங்குகிறது.
தரமான பயிற்சி, நிதியுதவிகளுடன் செஸ் விளையாட்டில் இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் அல்லாத பிற விளையாட்டுகளுக்கும் இது போன்ற அமைப்புகளின் உதவிகள் தேவை.