நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் கடந்த மாதம் 23ஆம் தேதி தொடங்கிய நிலையில், டெல்லி - பெங்களூர் அணிகள், டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், பெங்களூர் அணி வீராங்கனைகள் கட்டுக்கோப்பாக பந்துவீசியதால் விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி ரன் சேர்க்க தடுமாறியது.
தொடக்க வீராங்கனை ஷெஃபாலி வெர்மா மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து 44 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். 18.3 ஓவர்களில் ஆல் அவுட் ஆன டெல்லி, 113 ரன்களை மட்டுமே எடுத்தது.
அதனையடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. டெல்லி அணியும் அசத்தலாகப் பந்து வீசி பதிலடி கொடுத்தது. இதன் காரணமாக பெங்களூரு வீராங்கனைகள் நிதான அட்டத்தை வெளிப்படுத்தினர்.
பெங்களூர் அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 31 ரன்களும் ஷோஃபி டெவின் 32 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ் ஜோடி 3 பந்துகள் மீதம் இருக்கும் போதே அணியை வெற்றிபெற வைத்தனர்.
கேப்டன் மந்தனாவுக்கு, விராட் கோலி வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் 347 ரன்கள் குவித்த பெங்களூர் அணியின் எல்லிஸ் பெர்ரி, அதிக ரன் குவிப்புக்கான ஆரஞ்ச் கேப்-ஐ வென்றார். இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தியதுடன் ஒட்டுமொத்தமாக 13 விக்கெட் சாய்த்த, பெங்களூரு வீராங்கனை ஸ்ரேயங்கா படில், தொடரின் அதிக விக்கெட்டுக்கான பர்ப்பிள் கேப் வென்றார்.
ஆடவர் ஐபிஎல் போட்டிகளில் 16 முறை களம் கண்ட பெங்களூர் அணி விராட் கோலி, கெய்ல், ஏபி டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் போன்ற பலம் வாய்ந்த வீரர்களை கொண்டிருந்தாலும் ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை.
இந்நிலையில் பெங்களூர் அணி, மந்தனா தலைமையில் மகளிர் பிரீமியர் லீக் வாயிலாக முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.