நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா

உலக தடகள சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற நீரஜ் சோப்ரா!

உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் இன்று தொடங்கியது. வரும் 27ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச் சுற்று இன்று நடந்தது. அதில் முதல் வாய்ப்பிலேயே 88.77 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா. இதையடுத்து நாளை மறுநாள் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் அவர் விளையாட உள்ளார்.

இதேபோல் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு மேலும் 2 இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். டிபி மனு 81.31 மீட்டர், கிஷோர் ஜெனா 80.55 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

குரூப் ஏ பிரிவில் நீரஜ் சோப்ரா, டிபி மனு ஆகியோரும் குரூப் பி பிரிவில் கிஷோர் ஜெனாவும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இதனிடையே 2024 பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கும் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com