உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட போகும் நம்ம ஊர் விவசாயி!

பயிற்சியில் உதயகிரி
பயிற்சியில் உதயகிரி
Published on

70 வயதானோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியூசிலாந்தில் நடைபெற உள்ளது.

இந்தியா, இங்கிலாந்து, இலங்கை உட்பட 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், இந்திய அணியில் விளையாட உள்ள 16 பேர் கொண்ட பட்டியலை Veterans Cricket India சமீபத்தில் வெளியிட்டது. அதில் பொள்ளாச்சியைச் சேர்ந்த விவசாயி உதயகிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு, பேசினோம், “1956இல் பொள்ளாச்சி அருகேயுள்ள காளியப்ப கவுண்டர் புதூரில்தான் பிறந்து வளர்ந்தேன். என்னுடைய அப்பா ஆனைமலை ஒன்றிய சேர்மனாக இருந்தவர்.

கோவையில் உள்ள ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளிதான் என்னுடைய ஸ்போர்ட்ஸ் வாழ்க்கைக்கு உபதினோராவ

இந்திய அணி
இந்திய அணி

பள்ளியின் முதல்வரான ஃபவுலர், வார்டனனாக இருந்த மெல்வெல் இருவரும் ஆங்கிலேயர்கள். அவர்கள்தான் எனக்கு கிரிக்கெட் ஆட சொல்லிக் கொடுத்தனர். ஹாக்கியும் கற்றுக் கொண்டேன். அவர்களே என்னுடைய ரோல் மாடல்.

எட்டாவது படிக்கும் போது டேபிள் டென்னிஸில் கவனம் செலுத்தினேன். பள்ளியில் மட்டுமில்லாமல், மாவட்டம் மற்றும் மாநில அளவிலும் டேபிள் டென்னிஸில் முதலிடம் வந்தேன். ஒன்பதாவது, பத்தாவது, பதினோராவது படிக்கும் வரை டேபிள் டென்னிஸில் மாவட்ட சாம்பியன் நான் தான்.

பதினோராவது படிக்கும்போது, கோவை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு என்னை தேர்வு செய்தார்கள். டேபிள் டென்னிஸில் முழுகவனம் செலுத்தியதால், கிரிக்கெட் அணிகாக விளையாட முடியவில்லை.” என்றவர் சென்னைக்கு படிக்க வந்த கதையை சொன்னார்.

“பதினோராம் வகுப்புக்கு பிறகு மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரிக்கு பி.காம் படிக்கச் சென்றேன். அங்கு டேபிள் டென்னிஸ் அணியின் கேப்டன் நான் தான். அதேபோல், கூடைப்பந்து அணியிலும் விளையாடினேன். அப்போது கிரிக்கெட் கம்மியாகத்தான் ஆடினேன்.

கல்லூரி முடித்த பிறகு ஊரில் விவசாயம் செய்ய ஆரம்பித்துவிட்டேன். நிலத்துக்கு காலை 6 மணிக்கு சென்றால் மாலை 6 மணிக்குத்தான் வீட்டுக்கு வருவேன். அதனால், டேபிள் டென்னிஸ் விளையாட்டை தொடர முடியவில்லை. அப்பப்போ கிரிக்கெட் விளையாடுவேன்.” என்று ஏக்கத்துடன் பேசியவர், 70 வயதானோருக்கான இந்திய அணியில் தேர்வான கதையை சொன்னார்.

“என்னுடைய அண்ணன் டாக்டர் ஜெயக்குமார் கிரிக்கெட் பிரமாதமாக விளையாடுவார். தமிழக அணிக்காக விளையாடி உள்ளார். அதேபோல், என்னுடைய தம்பி தமிழ்நாடு பள்ளி ஹாக்கி அணியின் வீரராக இருந்துள்ளார்.

அண்ணன் ஜெயக்குமார் போன வருடம் 70 வயதானோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ளார். அவரை ஃபாலோ பண்ணிதான் நானும் Veterans Cricket India அறிவித்த பயிற்சிப் போட்டியில் கலந்து கொண்டேன். அதற்காக மும்பை சென்றேன். இரண்டு போட்டி வைத்து என்னை தேர்வு செய்தார்கள்.

இப்போது இந்திய அணியில் உள்ள 16 பேரில் 8 பேர் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள். மீதி 8 பேர் தான் இந்தியர்கள். தமிழ்நாட்டிலிருந்து நான் ஒருவன் தான்.

இந்த தேர்வுக்கு செல்வதற்கு முன்னர் மூன்று மாதம் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டேன். சிறு வயதிலேயே கிரிக்கெட் ஆடியதால், இப்போது பயிற்சி எடுப்பதற்கும் விளையாடுவதற்கும் கஷ்டமாக இல்லை.

இந்திய அணி முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது. அதற்கடுத்து இங்கிலாந்து அணியுடன். ஒவ்வொரு அணிக்கும் ஒருநாள் விட்டு ஒருநாள் போட்டிகள் உள்ளன. ஒவ்வொரு போட்டியும் 45 ஓவர்களைக் கொண்டது என்பதால், உடல்ரீதியாக வலுவாக இருப்பது முக்கியம். இதில், கண்பார்வை சரியாக இருக்க வேண்டு.” என்றவரிடம் டயட், பயிற்சி குறித்துக் கேட்டோம்.

”காலையில் ராகு கூழும், மதியம் கம்பு சாதத்துடன் காய்கறிகள், வெள்ளை சுண்டல் சாப்பிடுவேன். இரவு ராகி, பாசிப்பயறு, கம்பு இதில் ஏதேனும் ஒன்றில் தோசை சாப்பிடுவேன். அசைவ உணவு வாரத்துக்கு ஒருநாள் மட்டும்தான் எடுத்துக் கொள்வேன். அரிசி உணவு, இனிப்பு போன்றவற்றை தவிர்த்துவிடுகிறேன்.

காலையில் 6 மணியிலிருந்து 7 மணி வரை ஓடுவேன். பிறகு கிரிக்கெட்டுக்கு ஏற்ற உடற்பயிற்சி செய்வேன். குனிவது வளைவது, தோள்பட்டை உட்பட மற்ற கை கால் தசைகளை வலுவாக்குவது போன்ற பயிற்சிகளை செய்வேன். இந்திய அணியில் உள்ள ஒரே வேகப்பந்துவீச்சாளர் நான் மட்டும்தான். மாலை ஒரு மணி நேரம் கிரிக்கெட் பயிற்சி செய்வேன்.

நான் சந்தோஷத்துக்காகத்தான் விளையாடுகிறேன். விருதுக்கோ, அங்கீகாரத்துக்கோ இல்லை. சொல்லப்போனால் விளையாடுவதே சந்தோஷம் தான்” என உற்சாகமாகப் பேசினார் உதயகிரி. என்ன இருந்தாலும் கப்பு முக்கியம் பிகிலு....

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com