‘கோப்பையை கொண்டு வருவோம்!‘

 ‘கோப்பையை கொண்டு வருவோம்!‘

அகமதாபாத் ரயில்வே நிலையத்தில் தூங்கிய சி.எஸ்.கே ரசிகர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியை காண்பதற்கு நேற்று ஏராளமான ரசிகர்கள் வந்ததிருந்தாலும், ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே வருண பகவான் குறுக்கிட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டது. பலரும் மழையை பழித்துக் கொட்டினாலும், பல ஆயிரம் ரூபாய் செலவழித்து, பல நூறு கிலோமீட்டர் பயணம் செய்து போட்டியை காண சென்றவர்கள் தான் பரிதாபம்.

இன்று மாலை போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதும், உள்ளூர் ரசிகர்கள் வீடுகளுக்கு திரும்பினர். வெளி மாநில ரசிகர்கள் திரும்பி செல்வதற்கு முன்பதிவு செய்திருந்த விமான மற்றும் ரயில் முன்பதிவுகளை ரத்து செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சி.எஸ்.கே ரசிகர்கள். தங்குவதற்கு உரிய இடம் கிடைக்காததால் அகமதாபாத் ரயில் நிலையத்திலேயே பலர் படுத்து உறங்கியிருக்கின்றனர். இது தொடர்பான வீடியோவை ட்வீட்டரில் பகிர்ந்துள்ள ஒருவர், “நான் விடியற்காலை மூன்று மணிக்கு அகமதாபாத் ரயில்வே நிலையத்திற்கு சென்றேன். அங்கு சி.எஸ்.கே ஆடை ஆணிந்த பலர் தூங்குவதையும், சிலர் விழித்திருப்பதையும் கண்டேன். அவர்களிடம் பேசியபோது, நாங்கள் தோனி ஒருவருக்காக மட்டுமே வந்திருக்கிறோம் என்றார். அவர் பகிர்ந்துள்ள வீடியோவை  மூன்று மணி நேரத்தில் மூன்று லட்சம் பேர் பார்த்துள்ளனர். அந்த வீடியோவின் கமெண்டில், “நாங்கள் கோப்பையை அகமதாபாத்திலிருந்து சென்னைக்கு கொண்டு வருவோம். கிரிக்கெட் ரசிகனாக இருப்பதின் உண்மையான அர்த்தம் இதுதான்.” என பதிவிட்டுள்ளனர்.

இதை பிரதிபலிக்கும் விதமாக “நீங்கள் நிலவில் போட்டி நடத்தினாலும்.. அங்கே சி.எஸ்.கே. ரசிகர்கள் வருவார்கள். தமிழ்நாட்டு மக்கள் தோனியை மிகவும் விரும்புகிறார்கள்" என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ட்வீட் செய்துள்ளார்.

எப்படி இருந்தாலும், ரயில் நிலையத்தில் தூங்கிய சென்னை ரசிகர்கள் அடிக்கும் விசில் நிச்சயம் பெரிய விசிலாகத்தான் இருக்கப் போகிறது!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com