‘மூடநம்பிக்கைகளை பரப்பினால் எதிர்வினை கடுமையாக இருக்கும்’ – முதல்வர் எச்சரிக்கை!

‘மூடநம்பிக்கைகளை பரப்பினால் எதிர்வினை கடுமையாக இருக்கும்’ – முதல்வர் எச்சரிக்கை!
Published on

"தமிழ்நாட்டு கல்வி நிலையங்களில் அறிவியல் பூர்வமான கருத்துகளை, சமூக நீதியை மட்டுமே கற்பிக்க வேண்டும். இதற்கு மாறாக செயல்பட்டால் இந்த அரசின் எதிர்வினை கடுமையாக இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

சென்னையில் நேற்று பல்கலைக்கழகங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு, தனியார் கலைக் கல்லூரிகள் கூட்டமைப்பு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளின் சார்பில் நடைபெற்ற "மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு" விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

“தமிழ்நாட்டில் உயர்கல்வியை உலகளவில் மேம்படுத்த - துணைவேந்தர்கள், பதிவாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தை சில நாட்களுக்கு முன்னால் தலைமைச் செயலகத்தில் நடத்தினேன். அதில் நான் வலியுறுத்தி பேசியது என்னவென்றால், உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்கவேண்டும் - உலகத்தில் இருக்கின்ற பல நாடுகளில் இருந்தும், நம்முடைய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க மாணவர்கள் வரவேண்டும் - அதற்கான திட்டத்தை தயார் செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.

கல்வி நிலையங்களில், அறிவியல் பூர்வமான கருத்துகள் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும். பகுத்தறிவுக்கு எதிரான முட்டாள்தனமான கட்டுக்கதைகளை, மூடநம்பிக்கைகளை பரப்புகின்ற இடமாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஒருபோதும் இருக்கக் கூடாது.

இரண்டே நோக்கம்தான் இருக்கவேண்டும்: ஒன்று, அறிவியல் பூர்வமானது மற்றொன்று, சமூகநீதி. இதை கற்று தருகின்ற இடமாக தான் கல்விக்கூடங்கள் இருக்கவேண்டும். இதற்கு மாறான நிகழ்ச்சிகளை நடத்துவதோ, இதற்கு எதிராக பேசுகிறவர்களை கெஸ்ட்டாக கூப்பிடுவதோ நடந்தால், இந்த அரசின் எதிர்வினை கடுமையாக இருக்கும். ஏற்கெனவே ஒரு சம்பவத்தில் அது தெரிந்திருக்கும்.

மாணவர்கள் அதிகமாக இருக்கிறீர்கள். உங்களிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நிறைய பேர் இப்போது "படிக்காமாலேயே பெரிய ஆள் ஆகிவிடலாம், பணம் சம்பாதிக்க படிக்க வேண்டும் என்று அவசியமில்லை - யூடியூப்-ல் கூட சம்பாதிக்கலாம் - இன்ஸ்டாகிராமில் சம்பாதிக்கலாம் - அந்தக் கடை போடலாம், இந்தக் கடை போடலாம்" என்று டிசைன் டிசைனா ஏமாற்றுவார்கள். அந்த வலையில் சிக்கிவிடாதீர்கள். அவர்கள் சொல்வதெல்லாம் விதிவிலக்குகள். விதிவிலக்குகள் எப்போதும் விதியாகாது. உங்களுக்கு விருப்பமான எந்த வேலையையும், தொழிலையும் செய்யலாம். அது தவறில்லை. ஆனால், எல்லாவற்றிற்கும் கல்விதான் அடிப்படை! மறந்துவிடாதீர்கள். படிப்பு பயனற்றது என்று யாராவது சொன்னால், அவர்களை அமைதியாக உங்களுடைய வாழ்க்கையிலிருந்து புறக்கணியுங்கள்

கல்விதான் யாராலும் பறிக்க முடியாத உண்மையான சொத்து என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறேன். இன்னும் நூறு முறை சொல்லுவேன். ஏனென்றால், மாணவர்களை படிக்கவிடக்கூடாது என்று இப்போது புதிது புதிதாக தேசிய கல்விக் கொள்கை, விஸ்வகர்மா திட்டம் என்று திட்டங்களை கொண்டு வருகிறார்கள்.

மற்றொரு பக்கம், சோசியல் மீடியா மூலமாக தவறான அறிவுரைகள், திசைதிருப்பல்கள், மறுபக்கம், மாணவர்களிடம் சாதிய உணர்வை தூண்டுவது என்று பல வகையில் சதி நடைபெறுகிறது. உங்கள் ரோல் மாடலை சோஷியல் மீடியாவில் தேடாதீர்கள். சோஷியல் மீடியா என்பது, பொழுதுபோக்குக்கான ஒரு இடம்! அது உங்களுடைய திறனை மட்டுப்படுத்துவதாக இருக்கக் கூடாது! இதை மீறி படித்து நீங்கள் முன்னேறவேண்டும்.

கல்வியுடன், நம்முடைய மாணவர்களுக்கு சமூகநீதி - இடஒதுக்கீடு ஆகியவற்றின் வரலாறு தேவை. இதனால், அடைந்துள்ள வளர்ச்சி ஆகியவற்றைச் சொல்லிதந்து, நாம் இன்னும் அடைய வேண்டிய வளர்ச்சியை நோக்கி நடைபோடவேண்டும்! எந்தத் தடை வந்தாலும், அதையெல்லாம் முறியடித்து நாங்கள் நிச்சயம் உங்களை படிக்க வைப்போம்!

நான் சொல்லிக் கொள்வதெல்லாம். நீங்கள் பார்ப்பது மட்டுமே உலகம் என்று நினைக்காதீர்கள். உலகம் மிக மிகப் பெரியது. அதை பார்க்க கல்வி என்கின்ற கண்ணாடியை நீங்கள் போட்டுக்கொள்ள வேண்டும்! சாதி, மதம், தெரு, ஊர் என்று உங்களுடைய எல்லையை நீங்களே சுருக்கிக் கொள்ளாதீர்கள். அந்தக் காலத்திலேயே "பிச்சை எடுத்தாவது படி" என்று ஏன் சொன்னார்கள் என்று யோசியுங்கள். கல்விக்கு மிஞ்சியது எதுவுமே இல்லை!

நிறைவாக, நான் சொல்லிக்கொள்ள விரும்புவது... இங்கே, அரசு - கல்வியாளர்கள் - மாணவர்கள் இருக்கிறார்கள். நமக்கான உரிமைகளை மீட்டு, உங்களைப் படிக்க வைப்பது அரசின் கடமை.” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com