இதே நாளில் 51 குழந்தைகளின் கொடூரக் கொலைகள்... மறக்கமுடியுமா செஞ்சோலை துயரை!
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையே 2000-களில் பன்னாட்டு சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தது. அப்போது, 2006ஆம் ஆண்டில் அங்கு செஞ்சோலை வளாகத்தில் பள்ளிக் குழந்தைகள் மீது நிகழ்த்தப்பட்ட விமானத் தாக்குதலில் 51 மாணவர்கள் உட்பட 55 பேர் கொல்லப்பட்டனர். 130 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். ஒருவருக்கு பார்வை பறிபோனது. மூன்று மாணவிகள் கால்களை இழந்தனர்.
இன்று பாலஸ்தீனத்தின் காசாவில் நடக்கும் இஸ்ரேல் படையின் கொடூரத்தைப் போல, அப்போது ஈழத்தமிழர் தாயகப் பகுதியில் முப்படைத் தாக்குதல்களும் நடத்தப்பட்டன.
வடக்கு இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டம், வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்காக நடத்தப்பட்டதே, செஞ்சோலை வளாகம். அங்கு 2006ஆம் ஆண்டு இதே நாளில் முதலுதவி- தலைமைத்துவப் பயிற்சி பெறுவதற்காக பல பகுதிகளையும் சேர்ந்த பள்ளி மாணவர்கள் அங்கு சென்றிருந்தனர்.
அப்போது அங்கு இருந்த பன்னாட்டு போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்குத் தெரிந்த பள்ளி வளாகமான அவ்விடத்தில், இன்று காசாவில் குண்டுவீசும் இஸ்ரேலின் கிபீர் வகை விமானங்களே குண்டுகளைக் கொட்டி வீசி செஞ்சோலை வளாகத்தை ரத்தச்சகதியாக ஆக்கியது.
அந்தக் கொடூரப் படுகொலையின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று அங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதில், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் குகன் ஆகியோருடன் சமூகச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.