இலங்கைக் கப்பல் மூலம் நாடுபுக முயன்ற 3 கருப்புப் பட்டியல் நபர்கள்!
இலங்கையின் காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையே கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. வாரத்துக்கு மூன்று நாள்கள் இப்போதைக்கு இயக்கப்படும் என்றும் வரவேற்பைப் பொறுத்து விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இரு வழியாகவும் கப்பல் மூலம் பயணிகள் சென்றுவரும் நிலையில், தடைசெய்யப்பட்ட மூன்று பேர் கப்பல் மூலம் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று நாகையிலிருந்து காங்கேசன்துறைக்குச் சென்ற கப்பலில் இலங்கைக்குள் நுழையத் தடைவிதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர், அதே கப்பலில் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதைப் போலவே, இலங்கை மாத்தளையைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவுக்குள் நுழையத் தடைவிதிக்கப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். அவர் நாகப்பட்டினம் வந்ததும் வெளியே செல்லவிடாதபடி துறைமுகத்துக்கு உள்ளேயே பிடித்துவைக்கப்பட்டார். மீண்டும் இலங்கைக்கே திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.