6 மாதங்களில் 30 இலட்சம் சிகரட்டுகள்... இலங்கையில்!
தீவு நாடான இலங்கையில் கடத்தல் தொழிலுக்குப் பஞ்சமில்லை என்கிற கதையாகிவிட்டது. உள்நாட்டுப் போர் காலத்தைவிட அதிகமான அளவில் அந்நாட்டில் கடத்தல் பெருகிவிட்டது.
குறிப்பிட்ட சில போதைப்பொருட்கள், பீடி, சிகரட் கடத்தல் இதில் முக்கிய இடம் வகிக்கிறது. தமிழ்நாட்டுக் கடற்கரைப் பகுதியிலிருந்தும் கேரளக் கடற்கரைப் பகுதியிலிருந்தும் இலங்கைக்கு பீடி இலை கடத்தப்படுவதாக அங்கு தொடர் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
நேற்றுகூட கடற்படையின் சிறப்புப் படை மேற்கொண்ட நடவடிக்கையில், புத்தளம், எரம்புகோடல்ல, கப்பலடி ஆகிய பகுதிகளில் மொத்தம் 345 கி.கி. பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டன.
தொடர்கதையாக நடைபெற்றுவரும் இந்தக் கடத்தலில், நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சிகரட்டுகள் மட்டும் 30 இலட்சம் எண்ணிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்டவிரோதமாகக் கொண்டுசெல்லப்பட்ட இந்த சிகரட்டுகளின் மொத்த மதிப்பு சுமார் ஏழரை கோடி ரூபாய் என்று இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்டுள்ள 30 இலட்சம் சிகரட்டுகளையும் அழிக்கும் நடவடிக்கையை இலங்கை சுங்கத் துறை தொடங்கியுள்ளது.