இது எப்படி இருக்கு...ஓட்டுக்கு நாற்காலி, கோழிக்குஞ்சு+ !
தமிழ்நாடு உட்பட இந்திய மாநிலங்களில் வாக்குக்குப் பணம், பிரியாணி, மது வகைகளைத் தருவது சர்வசாதாரணம்போல ஆகி, ஜனநாயகத்துக்கு வேட்டுவைத்து வருகிறது. குறிப்பிட்ட சில இடைத் தேர்தல்களின்போது, வாக்குக்கு இலஞ்சம் கொடுக்கும் இந்த அவலம் ஜனநாயக முறையைக் கேவலப்படுத்திவிடும்.
இங்கு நடப்பதைப் போலவே, இலங்கையிலும் அவலங்கள் அரங்கேறிவருகின்றன.
அந்த நாட்டில் நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடியில், ஏதோ ஒரு வகையில் வாழ்வாதாரத்துக்குப் பணம் கிடைத்தால் சரி என்கிற மனப்பான்மையும் அங்கு இயல்பாகிவிட்டது.
இந்த சூழலில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை முன்னிட்டு வாக்குக்கு இலஞ்சம் கொடுப்பதில் அரசியல் கட்சிகள் தொடர்பானவர்கள் இறங்கியுள்ளனர். பெப்ரல் என்கிற தேர்தல் கண்காணிப்புக் குழுவிடம் இதுவரை 84 புகார்கள் பதிவாகியுள்ளன என்று அதன் அதிகாரி ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் நாற்காலிகள், கோழிக்குஞ்சுகள், பள்ளி மாணவர்களுக்கான எழுதுபொருட்கள் போன்ற பொருட்களை மக்களுக்கு வழங்குவதாக அவர் கூறினார்.
கடந்த 9ஆம் தேதி முதல் இப்படியான புகார்கள் வரத் தொடங்கின என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தேர்தல் சட்டங்களை மீறியதாக 44 புகார்கள் வந்துள்ளன என்று ஜனநாயக மறுசீரமைப்பு- தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் பொறுப்பாளர் மஞ்சுள கஜநாயக்கா ஊடகத்தினரிடம் கூறியுள்ளார்.
தேர்தல் தொடர்பாக 5 வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.