இலங்கையில் போருக்குப் பின்னர் மனிதவுரிமைகள் மேம்பாடு, நல்லிணக்கம் ஆகியவற்றின் நடப்பு நிலவரம் குறித்து ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட உள்ளது.
கடந்த திங்களன்று ஜெனீவாவில் தொடங்கிய பேரவையின் 57ஆவது கூட்டத்தொடரில், ஐநா மனித உரிமை உயர் ஆணையர் ஓல்கர் டர்க் உரையாற்றினார். அதையொட்டி மற்ற உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பேசினர். சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கைகளில், இலங்கையில் மனிதவுரிமைகளை மேம்படுத்துவதற்கு பேரவையின் உயர் ஆணையர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கை விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்கிவரும் இணை ஒத்துழைப்பு நாடுகள் கூட்டம் வரும் 19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் தலைமையில் அமெரிக்கா, கனடா, மலாவி, வடக்கு மாசிடோனியா, மாண்டிநீக்ரோ ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்வார்கள். சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமைகள் கண்காணிப்பு, ஆசிய மனித உரிமைகள் அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 9ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள மனிதவுரிமைப் பேரவையின் 57ஆவது கூட்டத்தொடரில் கொண்டுவரப்படவுள்ள இலங்கைத் தீர்மானம் பற்றி இதில் தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.