ஈழத் தமிழர், மலையகத் தமிழர் ஆளுக்கு ஒரு பக்கம்... அதிபர் தேர்தலில்!
அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கை அதிபர் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால், மலையகம், கொழும்பு பகுதிகளில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழர்கள் வடகிழக்கின் இந்த நிலைப்பாட்டுக்கும் தங்களுக்கும் தொடர்பே இல்லை என்கிறபடி தனிப் பாதையில் செல்கின்றனர்.
இப்போது, அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தரப்பினர் இரணில் விக்கிரமசிங்கேவை ஆதரிக்கின்றனர். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் குடும்பத்தின் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தாங்கள் அரசில் இருந்தாலும் இனிதான் கூடி முடிவை அறிவிப்போம் என அறிவித்துள்ளது.
கொழும்பிலும் மலையகத்திலும் செல்வாக்கு கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணியோ ரணிலுக்கு எதிராகவே முன்னர் முடிவெடுத்தது. இராஜபக்சேக்களை மக்கள் விரட்டியடித்தபின்னர் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தபோதும் அந்தக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அதை ஒப்புக்கொள்ளவில்லை.
இந்த நிலையில், தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு வேட்பாளர் தொடர்பாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
“தமிழ் பொது வேட்பாளர் புதியவராக இருப்பாரென எதிர்பார்த்தேன். ஆனால் ஏற்கெனவே எம்பியாக இருந்தவரே நிறுத்தப்பட்டுள்ளார். அவர்களின் இந்த முடிவை நான் எதிர்க்கவில்லை; அப்படியொருவரை நிறுத்த தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு உரிமை உண்டு. ஆனால் இதே முழக்கத்தை வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு அப்பால் கொண்டுவராதீர்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. பொது வேட்பாளர் பின்னணியில் அதிபர் இரணில் விக்கிரமசிங்கே உள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.” என்றும் மனோ கணேசன் கூறினார்.