இலங்கையில் ஈழத்தமிழர் தாயகப் பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொட்டித் தீர்த்த மழைக்கு இடையிலும் இன்று மாவீரர் நாள் அஞ்சலி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் போரில் உயிரிழந்த தங்கள் உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இலங்கையில் தனித் தமிழீழம் கேட்டு அரசுப் படைகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதப் போராட்டம் நடத்தியது. 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதியுடன் அந்தப் போராட்டம் மௌனிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஈழ விடுதலைக்கான போராட்டத்தில் தியாகம் செய்த தம் குடும்பத்தினர், உறவினர்களை மாவீரர்களாகப் போற்றி ஈழத்தமிழர்கள் நவம்பர் 21ஆம் தேதி முதல் ஒரு வாரம் மாவீரர் வாரமாகக் கடைப்பிடித்துவருகிறார்கள். இறுதி நாளான 27ஆம் தேதி மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நாளென பெருமளவில் மக்கள் திரண்டு அஞ்சலியில் கலந்துகொள்வார்கள்.
இந்த ஆண்டும் இன்று அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், சில நாள்களாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் புயல் சின்னத்தால் கனத்த மழை பெய்தது. வடக்கு மாகாணத்திலும் மழை கொட்டியது.
இன்று வீச்சு குறைவானபோதும் மழை தொடர்ந்தநிலையில், மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர்.
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தின் கஞ்சிகுடிச்சாறு பகுதியில் ஒரே ஒரு மாவீரர் துயிலும் இல்லம் உள்ளது. அங்கு 700-க்கும் மேற்பட்ட மாவீரர்களின் நடுகற்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன. இன்று மாலை இங்கு நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் மாவீரர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் எனப் பல தரப்பினரும் கலந்துகொண்டனர். அப்போது அங்கு சென்றவர்களிடம் காவல்துறையினர் இடையூறு செய்தனர். அவர்களின் வாகனப் பதிவெண்களை பதிந்தபின்னரே அனுமதித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடமும் காவல்துறையினர் முரண்டு பிடித்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.