தகப்பன் வழியில் மகன்... அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் விஷம்!
இலங்கையில் அடுத்த மாதம் 21ஆம்தேதி அதிபர்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் கடைசிக் கட்டத்தில் போட்டியிடுவதாக அறிவித்த மகிந்த இராஜபக்சேவின் மகன் நாமல் இராஜபக்சே, முதல் பிரச்சாரக் கூட்டத்திலேயே விஷத்தைக் கக்கத் தொடங்கிவிட்டார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இப்போதைய அதிபர் இரணில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திசநாயக்கா ஆகியோர் கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் குறிப்பாக ஈழத்தமிழர் பகுதிகளுக்கு ஒரு சுற்று வலம்வந்துவிட்டார்கள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு பிரச்சாரம் அமைந்திருக்கிறது. காரணம், சிங்கள மக்களைவிட ஈழத்துத் தமிழ் மக்களின் வாக்குகளைத் தங்கள் பக்கம் திருப்ப வேண்டும் என்பதுதான் அவர்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
இரண்டு இனங்களுக்கு இடையிலும் ஒற்றுமை உணர்வை உண்டாக்கும்வகையிலேயே அவர்களின் பிரச்சாரம், வாக்குறுதிகள் அமைந்துள்ளன. எந்த இடத்திலும் இனவாதத்தை உசுப்பிவிடும் வகையில் அல்லாமல், ஒட்டுமொத்த இலங்கையின் வளர்ச்சி, தமிழ் மக்களின் பிரச்னைக்கான தீர்வு என்பதையே அவர்கள் மையப்படுத்தினார்கள்.
ஆனால், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை எனக் குற்றம்சாட்டப்படும் ஈழத் தமிழர்கள் மீதான போரை நடத்திய மகிந்த இராஜபக்சேவின் குடும்பத்தை சிங்கள மக்களே ஆட்சியைவிட்டு ஓடவிட்டது வரலாறு. என்றாலும் அந்தக் குடும்பத்து வாரிசான நாமல் இப்போது அதிபர் தேர்தலில் வேட்புமனுவைத் தாக்கல்செய்த பின்னர், பேசிய முதல் பேச்சு அப்பனுக்குத் தப்பாமல் பிறந்த பிள்ளை என்பதைப்போல அமைந்துவிட்டது என கடுமையாக சாடல்கள் வந்தவண்ணம் உள்ளன.
மற்ற வேட்பாளர்கள் அனைவருமே இரண்டு இனங்களுக்கு இடையே அதிகாரப் பகிர்வு, கூட்டாட்சி என்பன பற்றி கலந்துரையாடல்களைக்கூட மேற்கொண்டு வருகின்றனர். சிங்கள மக்களின் எழுச்சியால் தூக்கி எறியப்பட்ட இராஜபக்சேக்களின் வாரிசான நாமல், பழையபடி சிங்கள் மக்களை நோக்கி, நாங்கள் மட்டுமே இந்த நாட்டின் ஒற்றையாட்சியை வலுவாகப் பாதுகாப்போம் என்று குறிப்பிட்டு, அதனால் தங்களுக்கே வாக்களிக்கவேண்டும் என்றும் பேசினார்.
தீவு நாடு முழுவதும் இன்னும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளாதநிலையில், அதற்கே மற்றவர்கள் முக்கியத்துவம் தருகின்ற நிலையிலும், யாரும் எதிர்பாராதபடி பழையபடி ஒற்றையாட்சி, ஒரே இனம் என்கிறபடி நாமல் பேசியிருப்பது, அவர்கள் குடும்பம் போட்டுள்ள இனவாத நச்சுக் கணக்கைத் தெளிவுபடுத்தியுள்ளது என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.