அரசுக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்களை அதிபர் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தக்கூடாது என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் வேலைகளுக்காக அரசு சொத்துகளைப் பயன்படுத்துவது தொடர்பாக, 1,052 புகார்கள் செய்யப்பட்டுள்ளன. இவைகுறித்து உடனடியாக விசாரணையைத் தொடங்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
அதிபர் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், விமானப் படைக்குச் சொந்தமான சிறு விமானங்கள், ஹெலிகாப்டர்களை அதிபர் வேட்பாளர்கள் பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிரச்சாரம் அல்லாத மற்ற பயன்பாடுகளுக்கு இவற்றைப் பயன்படுத்துவதில் தடை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து, தொடர்வண்டிகளைப் பயன்படுத்துவதாக இருந்தால், அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி இரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இரத்நாயக்கா குறிப்பிட்டுள்ளார்.