இலங்கைக்குத் தெரியாமல் அந்நாட்டுக் கடற்பரப்பில் எப்படி அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் வந்து தாக்குதல் நடத்தியது என அந்நாட்டு அரசு மீது கடும் எதிர்ப்பும் விமர்சனமும் எழுந்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பினார்.
“ இலங்கையின் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்குள் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று வந்திருந்தது அரசுக்குத் தெரியாதா? ஐஆர்ஐஎஸ் டேனா எனப்படும் ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து மார்க் 48 வகை பெரிய டார்பிட்டோ ஏவுகணை ஏவப்பட்டது. நமது நாட்டின் நிலப்பகுதியிலிருந்து 40 கடல் மைல்களுக்கு அப்பால் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் வரும்போது, அதைக் கண்டறிய நம்மிடம் மேற்பரப்பு ரேடார் இல்லையா? நீருக்கடியிலான சோனார் கட்டமைப்புகள் இல்லையா? இழுத்துச்செல்லும் சோனார் கருவிகள் இல்லையா? செயற்கைக்கோள் கண்காணிப்பு வசதி இல்லையா?” என்று சஜித் வரிசையாகக் கேள்விகளை அடுக்கினார்.
ஈரான் மீது தாக்குதல் நடத்தி அதன் மதத் தலைவரைக் கொலைசெய்த அமெரிக்க அரசைக் கண்டிக்க இலங்கை அரசு பயப்படுகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் உதுமா இலெப்பை ஆதங்கத்துடன் பேசினார்.