இலங்கையின் ஈழத்தமிழர் தாயகப் பகுதியான வடக்கு மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில், அதானி குழுமம் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் ஈடுபடவுள்ளது. இதற்கான ஒப்பந்தங்களை அரசு செய்தாலும் அங்குள்ள மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இத்துடன் மன்னார் கடலோரப் பகுதியில் கனிம மண்ணை அகழ்வதற்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
முந்தைய அதிபர், பிரதமர்களுக்கு இந்தப் பிரச்னை குறித்து அவர்கள் முறையிட்டபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புதிய அதிபராக அனுரகுமார திசநாயக்கா வந்தபின்னர், அவரிடம் இக்கோரிக்கையை வலியுறுத்துவதற்காக அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தை நேற்று நடத்தினார்கள்.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது. இந்து, கிறித்துவ, முசுலிம் என சர்வ மத பிரமுகர்களும் பொதுமக்களும் என நூற்றுக்கணக்கானவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
முன்னதாக, அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய அனுரகுமார திசநாயக்கா தான் வெற்றிபெற்றால் காற்றாலை மின் திட்டத்தை ரத்துசெய்வதாக அறிவித்திருந்தார்.