இலங்கையில் ஈழத் தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் சீன ராணுவம் வந்திறங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைத் தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் டெலோ கட்சியின் தலைவரும் வன்னி மாவட்ட எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றில் பேசிய அவர் இந்த விவகாரத்தை எழுப்பி அரசின் பதிலைக் கோரினார்.
இந்தியாவின் தமிழக மீனவர்கள் வடக்கு- கிழக்கு இலங்கையின் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தடை செய்யப்பட்ட இழுவை மடிப் படகுகளை அவர்கள் பயன்படுத்தி மீன்வளத்தை அழித்து வருவதாகவும் இந்திய அரசும் தமிழக அரசும் இதைத் தடுத்து நிறுத்தி வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் மீன்பிடி வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இலங்கை தமிழ் மீனவர்களின் பிரச்சினையைப் பயன்படுத்திக் கொண்டு சீன ராணுவம் வடக்கு கிழக்கில் நுழைய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன; அது உண்மையா? அரசாங்கம் இதை அனுமதிக்கின்றதா?தமிழர்கள் ஒருபோதும் சீன ராணுவத்தின் தலையீட்டை ஆதரிக்க முடியாது என்று செல்வம் அடைக்கலநாதன் பேசினார்.