Srilanka parliament election Senior Journalist Bhrathi Rajanayagam special interview
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் சிறப்பு பேட்டி

தலைகீழான இலங்கை... எப்படி நடந்தது?

Published on

கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களைப் பிடித்து பெரு வெற்றி பெற்றிருக்கிறது, அதிபர் அனுர குமார திசநாயக்காவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி. குறிப்பாக, ஈழத்தமிழர் கட்சிகளின் கோட்டையாக இருந்துவந்த யாழ்ப்பாணத்தில் மூன்று இடங்களைப் பிடித்திருக்கிறது, இந்தக் கூட்டணி. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் அனுரவின் கட்சிக்குக் கிடைத்த மூன்று இடங்கள்தான் இந்த முறை இராஜபக்சேகளின் கட்சிக்குக் கிடைத்திருக்கிறது. ஒருவகையில் இது தலைகீழ் மாற்றம்!

கொழும்பில் நீண்ட காலம் பணியாற்றிய மூத்த தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர் பாரதி இராஜநாயகம் அவர்களிடம் இதுகுறித்துப் பேசியதிலிருந்து...

Q

மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியை தேசிய மக்கள் சக்தி பெற்றது எப்படி.. அதுவும் யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளைவிடக் கூடுதலாக...?

A

ஆம், இலங்கையில் விகிதாச்சார தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தனியொரு கட்சிக் கூட்டணி இப்படியான மூன்றில் இரண்டு பங்கு வெற்றி என்பது வரலாறுதான். நாடளவில் கடந்த கால அரசியல் தலைமைகளின் மீது மக்கள் கடுமையான அதிருப்தி அடைந்திருந்தனர். நடப்பு நிலைமையிலிருந்து மாற்றம் வரவேண்டும் என அவர்கள் விரும்பினார்கள். அதுவே இந்தத் தேர்தலில் எதிரொலித்திருக்கிறது. வடக்கு, கிழக்கில் (ஈழம்) தமிழ்த் தலைமைகள் மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தியும் விரக்தியும் காணப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில்தான் தமிழரசுக் கட்சிக்கு 3 இடங்கள் கிடைத்திருக்கின்றன.

Q

கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஈழத்தமிழர் பகுதிகளில் அனுரகுமாராவைவிட சஜித்துக்கும் இரணிலுக்கும்தானே கூடுதலான வாக்குகள் கிடைத்தன. இந்த முறை எப்படி...

A

உண்மைதான். வெல்லக்கூடியவருக்கே வாக்களிக்கலாம் என வாக்காளர்கள் இந்த முறை முடிவுசெய்திருக்கலாம். மற்றபடி கடந்த முறை அதிபர் தேர்தலில் அதிக முறை வடக்கு, கிழக்கில் சஜித் பிரேமதாசா பிரச்சாரம் செய்தார். இந்த முறை இங்கு அவர் சரிவர பிரச்சாரத்துக்கே வரவில்லை என்பதும் காரணமாக இருக்கலாம். இன்னுமொன்று, அவரை கடந்த முறை தமிழரசுக் கட்சி ஆதரித்தது. இந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிட்டது.

Q

ஈழத்தமிழர் கட்சிகளில் பழைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மையக்கட்சியான தமிழரசுக் கட்சி மட்டும் 8 இடங்களை வென்றிருக்கிறது. அதிலிருந்து பிரிந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் உருவாக்கிய ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு ஏன் பழைய ஆதரவு கிடைக்கவில்லை?

A

தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை அதற்கென பாரம்பரியமான வாக்குகள் உண்டு. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் பல முன்னாள் ஆயுதக் குழுக்கள், அரசியல் கட்சிகள் இடம்பெற்றிருந்தன. கடந்த காலங்களில் இவர்களுக்கு மக்கள் ஆதரவு தந்தார்கள். இந்த முறை ஒருவருக்கொருவர் போட்டியாகவும் பற்பல குழுக்களாகவும் களம் கண்டதால் மக்கள் தளம்பலுக்கு உள்ளாகியிருக்கலாம். மற்றபடி அவர்களுக்கு இருக்கும் அதிருப்தியும் இதில் வெளிப்பட்டிருக்கக்கூடும்.

Q

யார் அதிபராக இருந்தாலும் அமைச்சராக ஒட்டிக்கொள்ளும் ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தா, விடுதலைப்புலிகள் காலத்திலேயே தேர்தலில் வென்ற வல்லமை படைத்தவர்தானே... அவர் முதல் முறையாக இப்போது தோல்வி அடைந்திருக்கிறார் அல்லவா?

A

டக்ளஸ் 1994ஆம் ஆண்டு முதல் எம்.பி.யாக இருந்துவந்தார். அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார். கடைசியாக அவர் மீன்வளத் துறை அமைச்சராக இருந்தார். டக்ளசின் ஆதரவுத் தளம் மீன்பிடிக் கிராமங்களைக் கொண்டது. அவரின் பதவிக்காலத்தில் தங்களுக்கான பிரச்னைகள் குறிப்பாக தென்னிந்திய மீனவர்களின் எல்லைதாண்டிய இழுவைமடிப் படகுகளின் அட்டகாசம், உள்நாட்டிலும் தடைசெய்யப்பட்ட இழுவைமடிப் படகுக்காரர்களின் ஆதிக்கம் போன்றவற்றை அமைச்சராக இருந்தும் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்கிற ஆதங்கம் அவர்களிடத்திலே ஏற்பட்டது. இந்த சமயத்தில் அவர்களின் கோரிக்கைகளை தேசிய மக்கள் சக்தி அனுசரனையோடு அணுகியது. தென்னிந்தியப் படகுக்காரர்களை அன்றாடம் கைதுசெய்து நடவடிக்கை எடுத்ததாக அதிபர் அனுரகுமார கூறியதுடன், தேர்தலையொட்டிய காலங்களில் அப்படியான கைதுகளும் தொடர்ந்து நடைபெற்றமை இங்கு இணைத்துப் பார்க்கவேண்டியுள்ளது.

மேலும், விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் தேசிய அளவில் மானியம் வழங்கும் அறிவிப்பு ஒன்றையும் அதிபர் அனுர அண்மையில் வெளியிட்டது, மீன்பிடி மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கலாம். மற்ற சில வாக்குறுதிகள் மீதும் அவர்களுக்கு இப்படியான நம்பிக்கை உருவாகியிருக்கக்கூடும்.

Q

தேசிய மக்கள் சக்தி என்பது ஒரு பக்கம், தென்னிலங்கை (சிங்கள)க் கட்சி ஒன்று வடக்கில் இந்த அளவுக்கு வெற்றியை ஈட்டியிருப்பதன் மூலம், ஈழத்தமிழர் தேசியம் எனும் அரசியலை மக்கள் கைவிடுவதாகக் கருதலாமா?

A

நாடு விடுதலை அடைந்தது தொடக்கம் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தலைமைகளின் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, போராட்ட இயக்கங்களாக இருந்து கட்சிகளாக ஆனவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றுதான் இதுவரை தமிழ் மக்கள் தங்கள் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையை எப்போதும் விடப்போவதில்லை. ஆனால், தமிழ் அரசியல் கட்சிகளின் பழைய தலைமைகளிடம் அதிருப்தியும் ஏமாற்றமுமே கிடைத்ததாக மக்கள் கருதும் இடத்துக்கு வந்துவிட்டார்கள். ஆனால் ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஊடாக தங்களின் அடிப்படையான வாழ்வாதாரப் பிரச்னைகள் தீர்க்கப்படும் என அவர்கள் எண்ணியிருக்கக்கூடும்.

Q

இராஜபக்சேக்கள் மீதான மக்களின் கோபத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இடைப்பட்ட ஓரிரு(?) ஆண்டுகளில் நாட்டை ஓரளவுக்கு திடமான நிலைக்குக் கொண்டுவந்த இரணில் விக்கிரமசிங்கே கட்சிக்கு சிங்கள மக்கள்கூட வாக்களிக்கவில்லையே?

A

இந்தத் தோ்தலில் ராஜபக்சாகள் துடைத்தெறியப்பட்டுள்ளாா்கள். அவா்கள் உருவாக்கிய பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் மூலமாகக் கிடைத்த ஓர் உறுப்பினா் பதவி உட்பட மூன்று ஆசனங்களை மட்டுமே பெற்றுள்ளாா்கள்.

ராஜபக்சாகளுக்கு ஆதரவளித்தவா் என்ற முறையில் இரணிலையும் மக்கள் வெறுத்து ஒதுக்கியுள்ளாா்கள். பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவந்தவா் என்ற முறையில் அவருக்கு ஓரளவு ஆதரவு இருக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்ட போதிலும், தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரங்கள் - அதனால் ஏற்பட்ட ஆதரவு அலை இரணிலையும் மண்கவ்வச் செய்துவிட்டது.

Q

மொத்த இலங்கையிலும் பேசுபொருளாக - புதியதொரு அலையாக, சினிமா பிரபலங்களைக் கொண்டாடும் இந்தியா உட்பட்ட நாடுகளைப் போல, யாழ்ப்பாணத்தில் அதிரடியாக அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டி சமூக ஊடகத்தில் பிரபலமான மருத்துவர் அர்ச்சுனா என்பவர் நீண்ட கால அரசியல் தலைவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு எம்.பி.யாகி இருக்கிறாரே?

A

மருத்துவா் அா்ச்சுனா சில மாதங்களுக்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில் உள்ள சாவகச்சேரி மருத்துவமனையின் பிரதிப்பணிப்பாளராக இருந்த போது மக்களுடைய மருத்துவச் சேவைகள் எந்த அளவுக்கு மோசமாக இருக்கின்றது என்பதையும், மருத்துவ மாபியாக்களையும் அம்பலப்படுத்தியதன் மூலமாக பிரபலமானவா்.

அவரது பிரபலத்துக்கு சமூக ஊடகங்களே பிரதான காரணம். அவரும் தமது பிரச்சாரத்தை சமூக ஊடகங்கள் மூலமாகவே பிரதானமாக முன்னெடுத்தாா். அரசியல் தலைவா்கள் பலரும் வெளிப்படுத்தாத பல பிரச்சினைகளைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தியவா் என்பன மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கை அதிகரித்தன. இந்தப் பிரச்சினைகளைப் பாராளுமன்றத்துக்கு அவா் எடுத்துச் செல்வாா் என்று மக்கள் நம்பினாா்கள்.

அவரது வெற்றிக்கு இவைதான் காரணம்.

Q

அதிபர் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களாக உள்ள ஈழத்தமிழர் தாயகப் பகுதியில் தமிழ்த் தேசியக் கட்சிகளும் அமைப்புகளும் குடிமக்கள் அமைப்புகளும் இணைந்து தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு என்பதை உருவாக்கி, பொது வேட்பாளரை நிறுத்தினார்கள். இந்த முறை அப்படி நிறுத்தியிருந்தால் ஒருவேளை முடிவுகள் இங்கு மாறியிருக்குமா?

A

அப்போதைய பொது வேட்பாளரின் சின்னமான சங்கு சின்னத்தில்தான் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இந்த முறை போட்டியிட்டது. தனித்துப் பிரிந்து தமிழ்த் தேசியக் கட்சிகள் போட்டியிட்டதால் யாழ்ப்பாணம், வன்னியில் இரண்டு இடங்களை சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் இழந்திருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒற்றுமையாகப் போட்டியிட்டிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் நிலைமை இப்படி அமைந்திருக்காது என்பது உறுதி.

logo
Andhimazhai
www.andhimazhai.com