இலங்கையில் பரபரப்போடு நடந்துவரும் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில், இதுவரை இல்லாதபடியாக பல்வேறு தரப்பினர், பல குழப்படிகளை அரங்கேற்றி வருகின்றனர்.
இராஜபக்சேக்களின் குடும்பக் கட்சியான இலங்கை பொது மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானவர்கள் அணி மாறி நிற்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா இல்லையா என விவாதம் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்திய வம்சாவளித் தமிழர் கட்சிகளில் மலையகத் தமிழர் கட்சிகள் இரணிலுக்கும் சஜித்துக்குமாக இரண்டு பக்கமாக ஆதரவு அளித்து நிற்கின்றன.
தமிழர்கள் என்றாலும் முசுலிம் அடையாளத்தோடு செயல்படும் கட்சிகளின் நிலையும் ஒரே மாதிரியாக இல்லை.
இந்த சூழலில், அரச படையால் போரில் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை அதன் அழிவுக்குப் பின்னரும் நாடாளுமன்றத்தில் ஆதரித்துப் பேசக்கூடிய ஒரு கட்சியாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இருந்துவருகிறது. அந்தக் கட்சிக்கு தற்போது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இந்த அதிபர் தேர்தலைப் பொறுத்தவரை, இரு இனங்களின் கூட்டாட்சியாக இல்லாமல் ஒற்றையாட்சிக்கானதாகவும் தமிழர்களுக்குப் பலனில்லாததாகவும் இருப்பதால் இதைப் புறக்கணிக்க வேண்டும் என்று பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது.
அக்கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா உட்பட்ட மாவட்டங்களில் தானாகவே மக்கள் மத்தியில் துண்டறிக்கைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.