ரணில் அழைப்பு- தமிழ்க் கட்டமைப்பு நிராகரிப்பு!
இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் தொடர்பாக உரையாட வருமாறு தமிழ்ப் பொதுக் கட்டமைப்புக்கு தற்போதைய அதிபரும் அதிபர் வேட்பாளருமான இரணில் விக்கிரமசிங்கே அழைப்பு விடுத்திருந்தார்.
கடந்த 8ஆம் தேதியன்று வடக்கு- கிழக்கு இலங்கையின் ஏழு தமிழ்த் தேசியக் கட்சிகள், ஏழு பொதுமக்கள் அமைப்புகளின் சார்பில் தமிழ்ப் பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஆதரவான பிரச்சாரமும் தொடங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று தமிழ் மக்கள் பொதுச்சபையின் சார்பில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் நானூறுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அரசியல், மக்கள்சபை பிரதிநிதிகளிடம் பொதுமக்கள் கேள்விகளை எழுப்பினார்கள்.
இதனிடையே நாளை திங்கட்கிழமை தமிழ்ப் பொதுக் கட்டமைப்பின் ஏழு அரசியல் தலைவர்கள், ஏழு சிவிலியன் தலைவர்களுடன் பேச விரும்புவதாக இரணிலின் அலுவலகம் மூலம் தனித்தனியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் பணிகள் மும்முரமாகத் தொடங்கியுள்ள நிலையில், இப்படி அவசர அவசரமாக ஒரு சந்திப்பில் கலந்துகொள்ள முடியாது என தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு தரப்பு மறுப்பு தெரிவித்துவிட்டது.