ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத்தொடர் கடந்த 9ஆம்தேதி ஜெனீவாவில் தொடங்கியது. இதில் இலங்கை இறுதிப் போருக்குப் பிந்தைய நிலவரம் தொடர்பான முன்னைய ’51/1 தீர்மானம்’ பற்றி தீர்மானம் செய்யப்படவுள்ளது.
தொடரின் முதல் நாளே இதைப் பற்றி விவாதம் தொடங்கப்பட்டது. மனித உரிமைகள் ஆணையாளர் ஓல்கர் டர்க் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனிதவுரிமைகள் மேம்பாடு தொடர்பான 51/1 தீர்மானம் குறித்து ஆதங்கப்பட்டார்.
இலங்கையில் வரும் 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது என்பதால், தேர்ந்தெடுக்கப்படும் புதிய அரசின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப முடிவும் மாறலாம். ஏற்கெனவே மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் காலம் இந்த மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், இந்தக் கூட்டத் தொடரில் அதைப் பற்றி முடிவையும் எடுத்தாகவேண்டும்.
இலங்கை விவகாரத்தில் இணை ஒத்துழைப்பு வழங்கிவரும் நாடுகள் தீர்மானத்தை மேலும் நீட்டிக்க வலியுறுத்தின. இந்தத் தொடர் அடுத்த மாதம் 7ஆம் தேதிவரை நடைபெறும் என்பதால், அதற்குள் புதிய அரசாங்கம் வந்து, அதன் இணக்கப்பாட்டுடன் பேரவையில் முடிவெடுக்கப்படும் என்று ஐ.நா.வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.