இலங்கைக்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள், அவர்களின் படகுகளை அந்நாட்டு அரசு பிடித்துவைத்துள்ளது. குறிப்பாக, தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அண்மையில், இந்தியாவுக்கு வந்த இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்கா, இரு நாட்டு மீனவர்கள் இடையே ஒரு மனிதாபிமானத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு அதன்மூலம் பிரச்னைக்கு முடிவு கட்டப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார். அதையொட்டி எப்போது பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகத்தினரைச் சந்தித்த இலங்கை கடற்றொழில், நீரியல் வளங்கள்துறை அமைச்சர் சந்திரசேகரிடம், மனிதாபிமானரீதியான பேச்சுவார்த்தைகள் நடக்குமா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, இனி பேச்சுவார்த்தை இல்லை; பேச்சுகள் முடிந்துவிட்டன என்றார் அவர்.
மேலும், ”யாரோடும் இனி பேச்சுவார்த்தை இல்லை. தற்போது மீன்பிடித் துறை அமைச்சின் அதிகாரிகளும் இந்திய அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்; அது துறைரீதியிலாக அந்த மட்டத்திலானது மட்டுமே. அந்தப் பிரச்னைகள் தொடர்பானவையே... மனிதாபிமான ரீதியிலான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் செல்லப்போவதில்லை. இதுதான் எங்களின் மனிதாபிமான நடவடிக்கை என்று நாங்கள் கூறுகிறோம். ” என்று விளக்கம் அளித்தார்.