
இலங்கையில் வடகிழக்குத் தமிழர் பிரச்னைகள் தொடர்பாக அந்நாட்டு அரசுத் தலைவர் அனுரகுமார திசநாயக்காவுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.கள். இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அரச தலைவர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
மாகாண சபைத் தேர்தல், புதிய அரசியலமைப்பு ஒன்றின் அவசியம் குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு பழைய அரசியல் தீர்வு பொருத்தமற்றது என்றும் எனவே புதிய அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அதற்காக அனைவரின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அனுர கேட்டுக்கொண்டார்.
வடக்கு, கிழக்கு மக்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டுவரும் மீன்பிடி, நிலப் பிரச்னைகள், உட்கட்டமைப்பு வசதி, மேம்பாட்டுத் தேவைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல பிரச்னைகளை முன்வைத்தனர்.
இப்பிரச்னைகளுக்குத் தீர்வு வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்போதே அனுரகுமார அறிவுறுத்தினார்.
”நாட்டில் இனவாதத்தை உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியது அவசியம்.” என்றும் அனுரகுமார வலியுறுத்தினார்.