இலங்கையில் அண்மையில் பெய்த டித்வா புயல் மழையால் அந்நாட்டின் பல்வேறு மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக, ஈழத்தமிழர்களின் தாயகப் பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகமான பாதிப்பு ஏற்பட்டது. மேலும், மலையகத் தமிழர்களின் தேயிலைத் தோட்டப் பகுதிகளிலும் நிலச்சரிவு, ஊரையே மூழுகடித்த வெள்ளம் என மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டனர்.
இரயில்வே துறைக்கு மட்டும் 30 கோடி டாலர்வரையிலான சொத்துகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது; குறிப்பாக, இருப்புப்பாதைகள் பல இடங்களில் அடித்துச் செல்லப்பட்டன; பல இடங்களில் அந்தரத்தில் தொங்குகின்றன; இப்போதைக்கு இரம்புக்கனை, பொல்காஹெவல ஆகிய பகுதிகளில் இருப்புப்பாதைகள் சரிசெய்யப்பட்டுள்ளன; கொழும்பு கோட்டை இரயில்நிலையத்திலிருந்து இந்தப் பகுதிகளுக்கான அலுவலக இரயில் சேவைகள் நேற்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளன.
மலையகத்துக்கான பாதைகள் பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளன; குறிப்பாக, மாத்தளை- கண்டி இருப்புப்பாதை மிக மோசமாகச் சேதம் அடைந்துள்ளது.
இதைப் போலவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான இருப்புப்பாதையும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு இவ்விரண்டு பகுதிகளுக்குமான தொடர்வண்டிப் போக்குவரத்தை எப்போது மீண்டும் தொடங்கமுடியும் எனக் கூறமுடியாது என்று அந்நாட்டின் இரயில்வே துறை பொது மேலாளர் இரவீந்திர பத்மபிரிய ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார்.