உங்களுடன் ஸ்டாலின்... சி.வி. சண்முகத்துக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த ஷாக்!

உங்களுடன் ஸ்டாலின்... சி.வி. சண்முகத்துக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த ஷாக்!
Published on

தமிழ்நாடு அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை விதிக்க கோரிய அதிமுக மனுவை அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக எம்பி சிவி சண்முகம், அதிமுக வழக்கறிஞர் இனியன் ஆகியோர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், தமிழ்நாடு அரசின் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் விளம்பரத்தில் திமுக சின்னம் இடம் பெற்றுள்ளது. அதேபோல முன்னாள் முதல்வர் கலைஞர், இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது படங்களும் இடம் பெற்றுள்ளன. இவை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு எதிரானது. ஆகையால் இதற்கு தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தனர்.

இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோ அடங்கிய அமர்வு, “தமிழ்நாடு அரசு புதிதாக தொடங்க உள்ள மற்றும் நடைமுறையில் உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதலமைச்சர்களின் படங்களையோ பயன்படுத்தக் கூடாது” என உத்தரவிட்டிருந்தது.

இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் திமுக தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான அமர்வு இன்று தேதி விசாரணை நடத்தியது.

விசாரணையின் போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், அரசு வெளியிட்ட விளம்பரங்களின் நகல்களை வழங்கினார். பின்னர், ”இந்த விளம்பரங்களில் எந்த இடத்திலும் விதிமுறை மீறல்களே இல்லை. ஒரு திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க பிரதமர் மற்றும் முதல்வர்கள் பெயர்கள்- படங்கள் காலம் காலமாக பயன்படுத்தப்படுகின்றன. ஆளுநரின் படங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த வழக்கை தொடர்ந்த சிவி சண்முகம், அதிமுகவின் மாநிலங்களவை எம்பி. முந்தைய அதிமுக ஆட்சியில் 22 அரசு திட்டங்களுக்கு ஒரே நபரின் பெயர்தான் வைக்கப்பட்டது. அப்போது சிவி சண்முகம், மாநில அமைச்சராகவும் பதவி வகித்தார்” என சிவி சண்முகத்தை சுட்டிக் காட்டியபடி வாதிட்டார் வில்சன்.

இதற்கு பதிலளித்த அதிமுக தரப்பு வழக்கறிஞர் மணிந்தர்சிங் , அதிமுக ஆட்சிக் கால திட்டங்களில் வைக்கப்பட்ட ‘அம்மா’ என்ற பெயர் பொதுவானது; தனிப்பட்ட ஒரு பெயர் இல்லை என்றார்.

அப்போது குறுக்கிட்ட திமுகவின் வில்சன், “நீங்கள் சொல்வது சரி… தமிழகத்தில் யாரும் அம்மாவாக முடியும்” என கிண்டலடித்தார்.

இதனைத் தொடர்ந்து, “கொள்கைத் தலைவர்கள் படங்கள் அரசின் திட்டங்களில் எந்த வகையிலும் இடம்பெறக்கூடாது என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள். தமிழ்நாடு அரசு இதனை மீறி இருக்கிறது. தற்போதைய முதல்வரின் படத்தையும் ஆளும் கட்சியின் சின்னத்தையும் கூட பயன்படுத்தி இருக்கின்றனர். இது அப்பட்டமான விதி மீறல்.” என்றார் அதிமுக தரப்பு வழக்கறிஞர் மணிந்தர்சிங்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான பெஞ்ச் அளித்த தீர்ப்பு: தேர்தல் களத்தில் மட்டும்தான் அரசியல் சண்டைகள் இருக்க வேண்டும். இந்த அரசியல் சண்டைகள் நீதிமன்றங்களில் இருக்கக் கூடாது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் அரசியல் கட்சிகள் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்த எந்த தடை கிடையாது. இத்தகைய வழக்கு தொடர்ந்த அதிமுக எம்பி சிவி சண்முகத்துக்கு ரூ10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகையை ஒரு வாரத்துக்குள் செலுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும். சிவி சண்முகம் செலுத்தும் அபராதத் தொகையை மக்கள் நலத் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு பயன்படுத்த வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இது தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுகிறது; இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடித் தீர்ப்பளித்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com