சென்னையில் கார்ல் மார்க்ஸூக்கு சிலை! – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

காரல் மார்க்ஸ்
காரல் மார்க்ஸ்
Published on

சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு உருவச் சிலை அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்று கொண்டிருக்கும் அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநாட்டில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ள நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

”உலக மாமேதை கார்ல் மார்க்ஸை பெருமைப்படுத்திட திமுக அரசு விரும்புகிறது. உலக தொழிலாளர்களே ஒன்றுகூடுங்கள் என்ற பிரகடனத்தை வடிவமைத்தவர் கார்ல் மார்க்ஸ். வரலாற்றை மாற்றியமைத்த சிலரில் தலைமகனாகப் போற்றப்படுபவர் கார்ல் மார்க்ஸ்.

அவரது நினைவு நாளான மார்ச் 14 ஆம் நாள் தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தோம். இந்தியா ஒரு காலத்தில் மறுமலர்ச்சி அடையும் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம் என எழுதியவர் மார்க்ஸ்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மார்க்ஸின் சிலை நிறுவப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாவது அறிவிப்பாக அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் தலைவரும் உறங்கா புலி எனப் போற்றப்பட்டவருமான மூக்கையா தேவருக்கு நாளை 103 ஆவது பிறந்த நாள்.

மதுரை உசுலம்பட்டியில் பிறந்த அவர், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நம்பிக்கை பெற்று ஃபார்வர்ட் பிளாக் கட்சியில் இணைந்தார். உசுலம்பட்டியில் பலமுறை தேர்தலில் நின்று வெற்றி பெற்று மக்கள் நாயகனாக திகழ்ந்தவர்.

அவருக்கு உசுலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com