‘உண்மைகளை திரிப்பதை நிறுத்துங்கள்’ என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
மக்களவையில் தமிழக எம்.பி.க்களை நாகரிகமற்றவர்கள் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கு தமிழக எம்.பி.க்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் மன்னிப்புகோரினார்.
மேலும் தர்மேந்திர பிரதான், மும்மொழி கொள்கைக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியதாக கூறி தமிழக அரசின் கடிதத்தையும் அவையில் வாசித்தார். இந்த கடிதத்தை அவர் தனது 'எக்ஸ்' தளத்திலும் பதிவேற்றி உள்ளார்.
இந்த கடிதத்துக்கு பதில் அளித்து திமுக எம்.பி.கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்:
மும்மொழிக் கொள்கை அல்லது தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்பதாக நாங்கள் எங்கும் குறிப்பிடவில்லை. பிஎம் ஸ்ரீ பள்ளிகளை மாநில அரசு தலைமையிலான குழுவின் பரிந்துரையின்படியே தமிழ்நாடு ஏற்கும் என்றும் மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் அல்ல என்றும் தெளிவாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு எது ஏற்றுக்கொள்ளத்தக்கதோ, அதை ஏற்றுக்கொள்வோம். உண்மைகளைத் திரிப்பதை நிறுத்துங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.