கதை திருட்டு: இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்துகள் முடக்கம்- அமலாக்கத்துறை நடவடிக்கை!

இயக்குநர் ஷங்கர்
இயக்குநர் ஷங்கர்
Published on

எந்திரன் திரைப்பட கதை விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி அசையா சொத்துக்ளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆரூர் தமிழ்நாடன் என்பவர் எழுதிய ‘ஜுகிபா’ கதை, ‘திக்திக் தீபிகா’ என்ற பெயரில் கடந்த 2007ஆம் ஆண்டு நாவலாக வெளியானது. இந்நிலையில் 2010ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படம் வெளியானது. அதைப் பார்த்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், எந்திரன் திரைப்படத்தின் கதை தன்னுடைய ‘ஜுகிபா’ கதை எனக்கூறி, எந்திரன் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

தொடர்ந்து, தனது கதையைத் திருடி ‘எந்திரன்’ படத்தை எடுத்துவிட்டு கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாகவும், இது காப்புரிமை சட்டத்தின்படி கிரிமினல் குற்றம் எனவும் கூறி எழும்பூர் கீழமை நீதிமன்றத்தில் ஆரூர் தமிழ்நாடன் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்நிலையில், ‘எந்திரன்’ திரைப்பட கதை விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான 3 அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘எந்திரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.290 கோடி வசூல் செய்துள்ளது. இந்த திரைப்படத்துக்காக இயக்குநர் சங்கர் ரூ.11.5 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் கதை அமைப்பு, கதாப்பாத்திரம், கருப்பொருள் கூறுகளை, ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா ஆய்வு செய்தது.

ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ‘ஜுகிபா’ கதைக்கும் ‘எந்திரன்’ திரைப்படத்தின் கதைக்கும் இருக்கும் ஒற்றுமையை அறிக்கையாக சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் இயக்குநர் ஷங்கர் மீதான கதை திருட்டு குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது. அந்தவகையில், காப்புரிமை சட்டத்தை இயக்குநர் ஷங்கர் மீறியுள்ளார். இது சட்டவிரோத பணப்பரிமாற்றம் 2022 சட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின் கீழ் இயக்குநர் ஷங்கரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரூ.10.11 கோடி மதிப்புள்ள 3 அசையா சொத்துகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com