சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாள்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், பத்திரமாக பூமிக்குத் திரும்பினார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை சுமார் 3.30 மணிக்கு அவர் பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில், கடலில் இறங்கி மிதந்தது.
விண்கலத்தில் இருந்து வெளியே வந்த சுனிதா வில்லியம்ஸ் சிரித்தபடி கையை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்திய நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உட்பட விண்வெளி வீரர்கள் 17 மணிநேர பயணத்திற்குப் பிறகு பூமியை அடைந்தார்.
இந்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் வளிமண்டல மறுநுழைவு என அழைக்கப்படும் ஆபத்தான கட்டத்தைக் கடந்து பூமியை நோக்கி பயணித்தது. பிறகு பல்வேறு கட்டங்களாக பாராசூட்கள் விரிக்கப்பட்டு, அதன் வேகம் குறைக்கப்பட்டு, நீரில் இறங்கி, மிதந்தது. சற்றுத் தொலைவில் படகுகளில் காத்திருந்த மீட்புக் குழுவினர் நான்கு விண்வெளி வீரர்களையும் பத்திரமாக மீட்டனர்.
விண்வெளியில் நீண்ட காலம் தங்கிய முதல் பெண்மணி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே அதிக மணிநேரம் செலவழித்த பெண் ஆகிய சாதனைகளை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார். இது சுனிதா வில்லியம்ஸின் மூன்றாவது விண்வெளிப் பயணம். மூன்று பயணத்திலும் சேர்த்து மொத்தமாக ஒன்பது முறை விண்வெளியில் நடந்துள்ளார் சுனிதா.
9 மாதங்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் பூமிக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் விரைவில் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள், அங்கு அவர்கள் மருத்துவ நிபுணர்களால் பரிசோதிக்கப்படுவார்கள்.
நீண்ட கால விண்வெளி பயணங்கள் உடலை பாதிக்கின்றன, விண்வெளி வீரர்கள் எலும்பு அடர்த்தியை இழந்து தசை இழப்பை சந்திக்கின்றனர். இரத்த ஓட்டமும் பாதிக்கப்படுகிறது. கண் பார்வையும் பாதிக்கப்படலாம்.
உடல் இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலம் ஆகலாம், எனவே சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவரின் உடலும் புவி ஈர்ப்பு விசையுடன் வாழ்வதற்கு மீண்டும் பழகுவதால் அவர்களுக்கு விரிவான உடற்பயிற்சி முறை வழங்கப்பட உள்ளன.