தணிக்கைச் சான்றிதழ் பெற்ற எந்தப் படத்தையும் வெளியிடுவதை தடுக்க முடியாது என்றும் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட கர்நாடக உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
தக் லைஃப் திரைப்படம் கடந்த ஜூன் 5 அன்று நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
முன்னதாக, இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில் பேசிய் கமல்ஹாசன் ‘தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது’ என்றாா். இந்தக் கருத்து மூலம் கன்னட மொழியை கமல் சிறுமைப்படுத்திவிட்டதாக கன்னட அமைப்புகள் எதிா்ப்புத் தெரிவித்தன. இதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கா்நாடகத்தில் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், மன்னிப்பு கேட்க கமல் மறுத்துவிட்டார்.
இதனால், கா்நாடகாவை தவிா்த்து மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இப்படம் வெளியானது.
தக் லைஃப் திரைப்படத்தை கா்நாடகாவில் திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரும் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் முன்னதாக தெரிவித்தது.
இந்நிலையில், கர்நாடகத்தில் தக் லைஃப் படத்தை வெளியிடுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “தணிக்கை வாரியத்தால் சான்றிதழ் பெற்ற எந்தவொரு திரைப்படமும் வெளியிடப்பட வேண்டும் என்றும் அதைத் திரையிடுவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் சட்ட விதி கூறுகிறது.
திரையரங்குகளை எரித்துவிடுவார்கள் என்ற பயத்தில், ஒரு திரைப்படத்தை திரையிட முடியாமல் இருக்க முடியாது. மக்கள் படத்தைப் பார்க்காமல் போகலாம். அது வேறு விஷயம். மக்கள் படத்தைப் பார்க்க வேண்டும் என்று நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. ஆனால் படம் கண்டிப்பாக வெளியிடப்பட வேண்டும்.
கமல்ஹாசன் பேச்சுக்காக அவரை மிரட்டுவதை ஏற்க முடியாது. கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறுவது உயர் நீதிமன்றத்தின் வேலை இல்லை.
தக் லைஃப் திரைப்படம் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும். கர்நாடகத்தில் தக் லைஃப் படத்தை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வியாழக்கிழமைக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.” என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.