‘ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு பிற மாநிலங்களுக்கும் கிடைத்த வெற்றி’ –முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்
Published on

ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல பிற மாநிலங்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.

மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்குவதாக உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பை அடுத்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

அவைக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளது.

ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. சட்டப்பேரவையில் நாம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த மசோதக்களுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பினார். அதை மீண்டும் தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பி வைத்தோம். அதற்கும் அவர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்றும் அந்த சட்ட முன்முடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக கருதப்பட வேண்டும் என்றும் தெரிவித்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு தீர்ப்பு தமிழகம் மட்டுமின்றி பிற மாநில அரசுகளுக்கும் கிடைத்த வெற்றி.

மாநில சுயாட்சி, மத்திய கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்று கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com