24 மணிநேரத்துக்குள் முதலமைச்சருடன் பேசி முடிவு… ஆளுநருக்கு நீதிமன்றம் அறிவுரை!

cm- governor
ஆளுநர் - முதல்வர் (கோப்புப்படம்)
Published on

நிலுவை மசோதாக்கள் உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் ஆலோசனை கூறியுள்ளது.

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான பனிப்போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. தமிழக சட்டமன்றம் தொடங்கி நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் வரைக்கும் இந்த விவகாரம் நீண்டுள்ளது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளதாகவும் இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும் குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்திருந்தது.

அதேபோல பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் யுஜிசி தலைவரையும் சேர்க்க ஆளுநர் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டு மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் தமிழக அரசு சார்பில் 3 வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர்.

மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதாடுகையில், ''சட்டத்தின்படி சட்டசபையில் ஒரு மசோதா நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டால் அதனை ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். இல்லாவிட்டால் திருப்பி அனுப்பலாம். ஒருவேளை திருப்பி அனுப்பும் மசோதா மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் அதற்கு ஒப்புதல்தான் வழங்குவதை தவிர வேறு வழியில்லை'' என்றார்.

விவாதம் காரசாரமாக நடந்த நிலையில். இது தொடர்பான வழக்கு விசாரணையை நாளைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி 24 மணிநேரத்துக்குள் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசி முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் ஆலோசனை கூறியது.

மேலும், ஆளுநர் மற்றும் அரசு இடையேயான மோதலில் மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். இதனால், அடுத்த 24 மணி நேரத்துக்குள் மீண்டும் தேநீர் விருந்துக்கு முதலமைச்சரை ஆளுநர் அழைக்கலாம் என்றனர் நீதிபதிகள்.

logo
Andhimazhai
www.andhimazhai.com