மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பர தூதராக நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது கன்னட மக்களிடையே எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது.
கர்நாடகா அரசின் மைசூர் சோப் மற்றும் டிடர்ஜெண்ட்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அவருக்கு ரூ.6.2 கோடி ஊதியமாக அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பரத் தூதராக நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்ட சம்பவம் கன்னட மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கன்னட திரைப்படத் துறையைச் சேர்ந்த திறமையான நடிகைகள் இருக்கும் போது, எதற்காக பாலிவுட் நடிகையை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று சமூக ஊடகத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது தொடர்பாக கர்நாடகா சோப்ஸ் மற்றும் டிடர்ஜெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பிரசாந்த் அளித்த விளக்கத்தில்:
“மைசூர் சாண்டல் சோப்பை இந்திய அளவில் கொண்டு செல்வதற்கு ஒரு விளம்பரத் தூதர் தேவை. அவர் இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் புகழ் பெற்றிருப்பது அவசியமான ஒன்று. அப்போதுதான் மைசூர் சாண்டல் சோப் உலகம் முழுவதும் சென்று சேரும். தேசிய அளவில் அடுத்த கட்டத்தை எட்டுவதற்காக நடிகை தமன்னா விளம்பரத் தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த நடிகைகளான ராஷ்மிகா மந்தனா, தீபிகா படுகோனே, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் வேறு நிறுவனத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால், அவர்களை எங்களால் ஒப்பந்தம் செய்ய முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சோப் மற்றும் டிடர்ஜெண்ட்ஸ் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,800 கோடியாகும். அதில் 12 சதவிகிதம் மட்டுமே கர்நாடகாவில் இருந்து ஈட்டப்படுகிறது. மீதமுள்ள 88 சதவிகித வருமானம் மற்ற மாநிலங்களில் இருந்தே ஈட்டப்படுகிறது. இதன் காரணமாக தேசிய அளவில் பல்வேறு மொழி ரசிகர்களால் கவனிக்கப்பட்டு வரும் நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.