கிரிப்டோ கரன்சி மோசடி: ‘எனக்கும் அதற்கும் தொடர்பு இல்லை’ – தமன்னா விளக்கம்

தமன்னா
தமன்னா
Published on

ரூ.2.40 கோடி மதிப்பிலான கிரிப்டோ கரன்சி மோசடியில் தனக்கு தொடர்பில்லை என நடிகை தம்மான விளக்கம் அளித்துள்ளார்.

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபத்தை கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி, புதுச்சேரியைச் சேர்ந்த 10 பேரிடம் ரூ.2 கோடியே 40 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த முன்னாள் அரசு ஊழியர் அசோகன் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், சினிமா நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வாலின் விளம்பரங்கள், நிகழ்ச்சிகளின் மூலம் ஆயிரக்கணக்கானோரிடம் பணத்தை திரட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நிதிஷ் ஜெயின், அரவிந்த் குமார், ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே, கிரிப்டோகரன்சி மோசடி தொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. தொடக்க விழா, நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்று விளம்பரப்படுத்தியதால், இருவரும் பங்குதாரர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்த திட்டமிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், நடிகை தமன்னா தன் மீதான புகாருக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'கிரிப்டோ கரன்சி முறைகேட்டில் தனக்கு தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அறிந்தேன். இதுபோன்ற வதந்தியான, பொய்யான செய்திகள் பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று மீடியாவில் உள்ள எனது நண்பர்களுக்கு வேண்டுகோளை விடுக்கிறேன். அதேசமயம், இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை எனது குழுவினர் எடுத்து வருகின்றனர்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com