சிந்துவெளி புதிருக்கு விடை கண்டால் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு! – முதல்வர் அறிவிப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

'சிந்துவெளி பண்பாட்டின் எழுத்து முறையை தெளிவாக புரிந்துகொள்ள உதவும் வழிவகையை கண்டறியும் அமைப்பு அல்லது நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும்' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு இன்று முதல் 7ஆம் தேதி வரை சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் , சிந்துவெளி நூற்றாண்டு கருத்தரங்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . மேலும், சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பினை உலகுக்கு அறிவித்த மேனாள் இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் சர் ஜான் ஹீபர்ட் மார்ஷல் திருவுருவச்சிலைக்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் .

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மு.க. ஸ்டாலின் கூறியதாவது:

“சிந்துவெளி நாகரிகத்தை கடந்த 1924இல் ஜான் ஹீபர்ட் மார்ஷல் உலகிற்கு அறிவித்தார். சிந்துவெளி நாகரிகம் ஆரியத்துக்கு முற்பட்டது என்றார். சிந்துவெளி நாகரிகம் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. மார்ஷலுக்கு சிலை அமைத்து சிறப்பிப்பது தமிழக அரசுக்கு பெருமை.

ஜான் மார்ஷலுக்கு சிலை அமைக்கும் பெருமை திராவிட மாடல் அரசுக்கு கிடைத்துள்ளது. 1948ம் ஆண்டிலேயே சிந்துவெளி அடையாளங்களை வெளிகொண்டு வந்தவர் அண்ணாத்துரை. செம்மொழி மாநாட்டில் சிந்துவெளி நாகரிகத்தை அடையாளப்படுத்தியவர் கலைஞர் கருணாநிதி. திராவிட மாடல் அரசு ஒரு கட்சியின் அரசு அல்ல, ஒரு இனத்தின் அரசு. நமக்கான அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டும்.

சிந்துவேளியில் இருந்த காளைகள் திராவிடத்தின் சின்னம். தாமிரபரணி நாகரீகம் 3,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று உறுதி செய்துள்ளோம். தமிழக சமூகத்தின் தொன்மைகளை அறிவுலகம் ஏற்றுக்கொள்ளத் தொடங்கி இருக்கிறது. இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை தமிழை தவிர்த்துவிட்டு இனி எழுத முடியாது.

சிந்துவெளி பண்பாட்டின் எழுத்து முறையை தெளிவாக புரிந்துகொள்ள உதவும் வழிவகையை கண்டறியும் அமைப்பு அல்லது நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும்

சிந்துவெளி ஆராய்ச்சியை மேற்கொள்ளும் வகையில், ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வறிக்கை அமைக்க ரூ.2 கோடி நிதி உதவி வழங்கப்படும். தமிழ்ப் பண்பாட்டை உலகறியச் செய்வதற்காக உழைப்பவர்களில், ஆண்டுதோறும் 2 அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com