மு.க.ஸ்டாலின் - கமல்ஹாசன்
மு.க.ஸ்டாலின் - கமல்ஹாசன்

காலை உணவுத் திட்டத்துடன் தமிழக அரசு இதையும் செய்யலாம்! – கமல்ஹாசனின் புது ஐடியா!!

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கான உணவுப் பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு. த் தொடக்கப் பள்ளிகளிலும் நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தை வரவேற்றுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் சிலர் ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ,”இந்திய மாநிலங்களிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 17 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெற இருக்கிறார்கள். இதனால் வரும்கால தலைமுறை மாணவர்கள் பசியின்றி படித்து முன்னேற முடியும். இந்தச் சாதனையைச் சாத்தியமாக்கிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “பாரம்பரிய நெல் ரகங்களையும், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களையும், நாட்டு ரக பழவகைகளையும் சாகுபடி செய்யும் தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து இத்திட்டத்தில் பயன்படுத்தினால் மாணவர்களுக்குச் சத்தான சுவையான உணவும் கிடைக்கும். விவசாயிகளின் நலன்களும் பாதுகாக்கப்படும். இதன் மூலம் பாரம்பரிய நெல் வகைகளும், தானியங்களும் பாதுகாக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டில் அதிகம் இடம்பெறவும் வாய்ப்புண்டு. இதன் சாத்தியங்களையும் தமிழக அரசு ஆராய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.” என கமல்ஹாசன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com