ஓவியர் மாருதி
ஓவியர் மாருதி

பிரபல ஓவியர் மாருதி காலமானார்!

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற பிரபல ஓவியர் மாருதி காலமானார். அவருக்கு வயது 86.

இரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட ஓவியர் மாருதி புதுக்கோட்டையில் 1938ஆம் ஆண்டு பிறந்தவர். வீட்டில் கிடைக்கும் சாக்பீஸைக் கொண்டு ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார். புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.யூ.சி படிப்பில் சேர்ந்தார். ஆனால், ஓவியங்களின் மீதான ஆர்வம் காரணமாக படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டார். தஞ்சாவூரைச் சேர்ந்த அரசு ஊழியரான விமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு சுபாஷினி, சுஹாசினி என இரு மகள்கள் உள்ளனர்.

திரைப்படங்களுக்கு பேனர் வரையும் ஆசையில் 1959ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார். மைலாப்பூரில் திரைப்படங்களுக்குப் பேனர் வரையும் நிறுவனத்தில் ஓவியம், பெயர் எழுதும் பணி செய்தார். சென்னையில் ஆர். நடராஜன் என்ற ஓவியரிடம் நடிகர் சிவக்குமாரும், இரங்கநாதனும் ஓவியம் கற்றார்கள்.

அதேபோல், நாளிதழ்களில் ஓவியம் வரையும் வாய்ப்பு பெற்றார். அவரது முதல் ஓவியம் 1959 அன்று வெளியான குமுதம் வார இதழில் வெளியானது. கண்மணி, பொன்மணி, விகடன், குமுதம், குங்குமம் போன்ற இதழ்களுக்கு அட்டைப்படமும், கதை கவிதைகளுக்கு ஏற்ற ஓவியங்களும் வரைந்துள்ளார். தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கியுள்ளது.

இந்நிலையில், புனே நகரில் தனது மகள் வீட்டில் தங்கியிருந்த மாருதி, உடல் நிலை குறை காரணமாக இன்று 2:30 மணியளவில் காலமானார். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com