“இந்தியாவின் வாகன உற்பத்தி மற்றும் மின் வாகன உற்பத்தியின் தமிழ்நாடு தான் கேபிட்டல் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு இந்த தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக ரூ.1119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட கார் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் வி.எப்-6, வி.எப்-7 ஆகிய வகை கார்கள் விற்பனைக்கு தயாராக உள்ளன.
இந்நிலையில், வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை இன்று திறக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்தார். மேலும், கார் முதல் விற்பனையையும் அவர் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: “தெற்காசியாவின் மிகப்பெரிய குழுமங்களில் ஒன்றான வின் குழுமம் முதலீடு செயவதற்காக தமிழ்நாட்டை தேர்வு செய்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவில் உற்பத்தியாகும் மின் வாகன உற்பத்தியில் 40% தமிழ்நாட்டிலிருந்துதான் உற்பத்தியாகிறது. இந்தியாவின் வாகன உற்பத்தி மற்றும் மின் வாகன உற்பத்தியின் தமிழ்நாடு தான் கேபிட்டல் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன்.
கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 16ஆயிரம் கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 3500 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலை வாய்ப்பு என்ற வகையில் இந்த உற்பத்தி திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து நடைபெற்றது. அடிக்கல் நாட்டிய 17 மாதங்களில் உற்பத்தி தொடங்கப்பட்டிருக்கிறது. இதனால் தூத்துக்குடி மட்டும் இல்லை தென்மாவட்டங்கள் வளர்ச்சி அடையும். இந்நாள் தென் தமிழ்நாட்டின் பொன்நாள்.
கல்வி, மருத்துவம், தகவல் தொடர்பு போன்றவற்றில் சிறந்து விளங்கும் வின் குழுமத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். தங்களின் வருங்கால முதலீடுகளை தமிழ்நாட்டில் செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.