வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை கட்டாயம் இருக்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025-26 ஆம் ஆண்டுக்கான மாநில நிதிநிலை அறிக்கையை வருவாய்த் துறை பொறுப்பு வகிக்கும் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி கடந்த வாரம் தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், இன்று கூடிய சட்டப்பேரவையில், “புதுச்சேரியில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் தங்களது பெயர் பலகைகளில் தமிழ் பெயர் அதிகம் இல்லை. கட்டாயம் வைக்க வேண்டும்” என உறுப்பினர் நேரு சட்டப்பேரவையில் பேசினார்.
அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, "புதுச்சேரியில் உள்ள கடைகளில் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டியது கட்டாயம். நிச்சயமாக கடை வைத்திருக்கும் வியாபாரிகள் பெயர் பலகையில் தமிழில் பெயர் வைக்க வேண்டும். தமிழ் நமது உணர்வு. அரசு விழா அழைப்பிதழ்கள் தமிழில்தான் அச்சடிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.