அடுத்த 2 ஆண்டுகளுக்கு இது முக்கிய வேலை - மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் ஸ்டாலின்

14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
Published on

 சென்னை உட்பட்ட 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் இன்று காலையில் ஆலோசனை நடத்தினார். வீடு கட்டும் திட்டம் குறித்து அப்போது அவர் மாவட்டவாரியாக விவரங்களைக் கேட்டறிந்தார். சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அப்போது உடனிருந்தார்.  

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த ஆட்சியின் பணிகளை விவரித்த முதலமைச்சர், கூட்டத்தில் அடுத்த இரு ஆண்டுகளுக்கான முக்கிய பணிகளைக் குறிப்பிட்டுப்  பேசியதாவது:  

” “மக்களுடன் முதலமைச்சர்” திட்டத்தினை வரும் ஜூலை திங்கள்
15-ஆம் நாள் முதல் செப்டம்பர் திங்கள் 15-ஆம் நாள் வரை ஊரகப் பகுதிகளில் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 * “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” மற்றும் “நீங்கள் நலமா?” போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்படவுள்ளது.

* வருவாய்த் துறையில், பட்டா மாறுதல், சான்றிதழ்களைப் பெறுவதில் பொதுமக்கள் அடையும் சிரமங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன.  மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

* “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்திற்கும்; இரண்டரை லட்சம் தொகுப்பு வீடுகளைப் புனரமைக்கும் திட்டத்திற்கும் நீங்கள் தனிக்கவனம் செலுத்தி பணிகளை துரிதமாக முடிக்க வேண்டுமென்று உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

* அனைத்துப் பள்ளிக் குழந்தைகளும் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வகையில் “கல்லூரிக் கனவு” “உயர்வுக்குப் படி” போன்ற திட்டங்களை நீங்கள் ஆர்வத்துடனும், முனைப்புடனும் செயல்படுத்த வேண்டும்.

* அதேபோல், விரைவில் தொடங்கப்படவிருக்கும் “தமிழ்ப்புதல்வன்” திட்டமும் மிகவும் முக்கியமான திட்டமாகும்.  இதுபற்றி முதலிலேயே சொல்லி இருக்கிறேன்.

* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.  இந்தத் திட்டத்தையும் நீங்கள் கவனமாக கண்காணிக்க வேண்டும்.

*  2024-25-ஆம் ஆண்டில் தங்கள் மாவட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளை விரைவில் காலம் தாழ்த்தாமல் முடிக்க வேண்டுமென்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.  ஏனென்றால் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் இயற்கை இடர்ப்பாடுகளின் காரணமாக பணிகள் தாமதப்படக்கூடும்.  இதனை கருத்தில் கொண்டு கிடைத்துள்ள குறுகிய காலத்திற்குள் சரியாக திட்டமிட்டு மாவட்டங்களில் திட்டப் பணிகளை நல்ல தரத்துடன் விரைவாக முடிக்க வேண்டுமென்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இன்னொரு மிக முக்கியமான ஒரு கடமையும் உங்களுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை பெருமளவில் நாம் கட்டுப்படுத்தி இருக்கிறோம். ஆனால் அது போதாது! போதை பொருள் நடமாட்டம் என்பது சட்டம் - ஒழுங்குப் பிரச்னை மட்டுமல்ல, சமூக ஒழுங்குப் பிரச்னை! எனவே தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.  இதற்காக பெரும் இயக்கத்தை நாம் தொடங்க இருக்கிறோம்.

மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் நகராட்சித் துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து, போதைப் பொருட்கள் பயன்பாட்டை உங்கள் மாவட்டத்தில் முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

போதைப் பொருள் நடமாட்டம் இருக்கும் என கண்டறியப்படும் பகுதிகளில் தனிக்கவனம் - தீவிரக் கவனம் செலுத்தியாக வேண்டும். “போதை பொருட்களின் நடமாட்டம் அறவே இல்லை, முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம்” என்ற நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும்.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்திப் பேசினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com