அ.தி.மு.க.வை கோவை மக்கள் நிராகரித்துவிட்டார்கள்- அண்ணாமலை

அண்ணாமலை பா.ஜ.க.
அண்ணாமலை பா.ஜ.க.
Published on

மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வை கோவை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை மேலும் சூட்டைக் கிளப்பிவிட்டுள்ளார். 

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க. மீது தொடர்ந்து தன்னுடைய பாணியில் கருத்துகளைக் கூறியிருந்தார். இதைப் பற்றி கோவையில் இன்று முன்னாள் அமைச்சர் வேலுமணியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அண்ணாமலை அதிகமாகப் பேசிவிட்டதுதான் பிரச்னை என்று பதில்கூறினார். மேலும், சி.பி.இராதாகிருஷ்ணனைவிட அண்ணாமலை குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளார் என்றும் குறிப்பிட்டார். 

இன்று பிற்பகல் கோவைக்குத் திரும்பிய அண்ணாமலையிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, “ ஒரே அணியாக இருந்திருக்கலாம் என இன்று பேசுபவர்கள்தான், பா.ஜ.க.வை குறைகூறிப் பேசினார்கள். வேலுமணிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது போல..” என்று கிண்டலடித்தார். மேலும், வேலுமணி தவறான தகவல்களைக் கூறியுள்ளார்; அதைவைத்து கேள்வி எழுப்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். 

கோவையில் ஸ்மார்ட் சிட்டி போன்ற அ.தி.மு.க. செய்த ஊழல்களைப் மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அ.தி.மு.க.வை நிராகரித்துள்ளனர் என்றும் அண்ணாமலை கூறினார். 

அண்ணாமலையால்தான் பா.ஜ.க.வுக்குப் பின்னடைவு என எஸ்.வி.சேகர் கூறியதைப் பற்றிக் கேட்டதற்கு, “ யாரென்றே தெரியவில்லை. நான் நாங்கள் வேலைசெய்ததால்தான் இரட்டை இலக்க வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். கோவை போன்ற இடங்களில் அ.தி.மு.க.வைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தில் வந்திருக்கிறோம். கோவையில் அ.தி.மு.க. மூன்று தொகுதிகளில் டெபாசிட் வாங்கமுடியாமல் செய்திருக்கிறோம். 11.5 சதவீத வாக்குகள் வாங்கியிருக்கிறோம். இதெல்லாம் எப்படி?” என வரிசையாகக் கேள்விகளை அடுக்கினார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com