கே.பாலகிருஷ்ணன், சி.பி.எம். மாநிலச் செயலாளர்
கே.பாலகிருஷ்ணன், சி.பி.எம். மாநிலச் செயலாளர்

அ.தி.மு.க. அரசு நீக்கிய விவசாயிகள் நலவாரியம் - முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்!

அதிமுக அரசு நீக்கிய ’தமிழ்நாடு விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் நலவாரிய சட்டத்தை’ மீண்டும் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பலகிருஷ்ணன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடித விவரம்:

” தற்போது தமிழ்நாட்டில் ஒரு கோடியே 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு மிக குறைவான நாட்களே வேலை கிடைக்கிறது. விவசாயக் கூலி வேலைகளை மட்டுமே நம்பியிருக்கும் இம்மக்கள் போதிய வருமானமின்றியும், கடுமையான விலை உயர்வின் காரணமாகவும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.

1998ல் திமுக ஆட்சிகாலத்தில் கலைஞர் அவர்கள் நலவாரியத்தை அமைத்தார். ஆனால், 2001ல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அதை மாற்றி “உழவர் பாதுகாப்பு திட்டம்” என்று அறிவித்து. அதன்பிறகு 2006ல் மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, டாக்டர் கலைஞர் அவர்களால் அமைக்கப்பட நல வாரியம் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள்-விவசாயிகள் (சமூக பாதுகாப்பு மற்றும் நலன்) சட்டம் 2006ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாநில அரசின் வருவாய்த்துறை அமைச்சரை தலைவராக கொண்டு அரசு தரப்பு பிரதிநிதிகள் 6 பேர், அரசு சாரா பிரதிநிதிகள் 8 பேர் கொண்ட மாநில வாரியம் உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தின்படி விவசாய தொழிலாளர்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

2011ல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு சட்ட அந்தஸ்துடன் செயல்பட்ட இந்த நலவாரியத்தை முடக்கியது. தங்களுடைய ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட உழவர்பாதுகாப்பு திட்டத்தையே மீண்டும் கொண்டு வந்தது. விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் சமூகப் பாதுகாப்பு திட்டத்தை அமலாக்குவதை நிறுத்தி வைத்தது. மேலும், போதிய நிதி ஒதுக்காமலும் திட்டத்தை கிடப்பில் போட்டது. இதனால், விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற உழைப்பாளிகள் சொல்லொணா துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள், 2006இல் கலைஞரால் கொண்டுவரப்பட்ட “தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலம்) சட்டத்தை” மீண்டும் நிறைவேற்றி விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.” என்று கே. பாலகிருஷ்ணன் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com