சேலம் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு
சேலம் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

அ.தி.மு.க. வாக்கு 1% கூடியிருக்கிறது : எடப்பாடி சொன்ன விளக்கம்!

அ.தி.மு.க. கடந்த மக்களவைத்தேர்தலைவிட ஒரு சதவீதம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதைக் கூறினார். 

அவர் அளித்த பேட்டி:

“ பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர்கள் நட்டா, அமித் ஷா, அமைச்சர்கள் இராஜாத்சிங், நிர்மலா சீத்தாராமன் தமிழகத்திற்கு வந்து பிரச்சாரம் செய்தார்கள். பா.ம.க. தலைவர் இராமதாஸ், அன்புமணியும் பிரச்சாரம் செய்தார்கள். தி.மு.க.வுக்கு ஆதரவாக முதலமைச்சரும் உதயநிதியும் மற்ற அமைச்சர்களும் பிரச்சாரம் செய்தார்கள். அமைச்சர்கள் தொகுதிகளில் முகாமிட்டு ஆட்சி அதிகார பலத்தை, பண பலத்தை வைத்து தேர்தலை எதிர்கொண்டனர். அ.தி.மு.க.வில் நான் மட்டும்தான்... தே.மு.தி.க. பிரேமலதா பிரச்சாரம் செய்தார். ஊடகங்கள் மூலம் இல்லாததும் பொல்லாததுமாக மக்களைக் குழப்பும்வகையில் எதிரிகள் உத்தியைக் கையாண்டார்கள். இவ்வளவுக்குப் பிறகும் 2019 தேர்தலைவிடக் கூடுதலாக ஒரு சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளோம்.

பா.ஜ.க. வளர்ந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். கடந்த தேர்தலில் பா.ஜ.க.கூட்டணி பெற்றது 18.8 சதவீத வாக்குகள். இப்போது 18.28 சதவீத வாக்குகள். குறைவு 0.62 வாக்குகள். ஆனால், அதிகமாக வாங்கியதாகக் கூறுவது வருத்தமளிக்கிறது.

தி.மு.க. கடந்த தேர்தலில் 33.52 %. இந்தத் தேர்தலில் தனியாக அவர்கள் 26.93 %. ஆக, 6.59% வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளது.

அதேபோல, தி.மு.க. கூட்டணி 2019இல் 53.29%. இப்போது 2024 தேர்தலில் 46.97%. 6.32 சதவீத வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளது.

எனவே, பா.ஜ.க., தி.மு.க. கூட்டணிகளைவிட அ.தி.மு.க. அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.

தென் மாவட்டங்களில் ஏழு தொகுதிகளில் அ.தி.மு.க. டெபாசிட் இழந்திருக்கிறதே எனக் கூறுகிறீர்கள். அங்கு வலுப்பெறுமா என்றால் வலுப்பெறும். சட்டமன்றத் தேர்தல் வேறு, நாடாளுமன்றத் தேர்தல் வேறு. மத்தியில் ஆட்சிக்கு யார் வரவேண்டும் என்பதற்காக வருவது. சில தொகுதிகளில் நிலைமை சரிசெய்யப்படும்.

ஒவ்வொரு தேர்தலின்போது அந்தந்தக் கூட்டணிகளுக்கு ஏற்ப சூழ்நிலைக்கு ஏற்ப வெற்றி தோல்வி மாறும். 1991 தேர்தலில் தி.மு.க. இரண்டே இடங்கள்தான் வந்தது. 1996இல் அ.தி.மு.க. நான்கே இடங்கள்தான். தி.மு.க.வோ அ.தி.மு.க.வோ அழிந்துபோனதா? 2014இல் தி.மு.க. நாடாளுமன்றத்தில் ஓர் இடம்கூட வரவில்லை. எனவே, பின்னடைவு என்பதெல்லாம் திட்டமிட்டு பரப்பப்படும் செய்தி.

வேலுமணி கூறியதைப் பற்றி கேட்கிறீர்கள்; இதைத்தான் சொல்லியிருக்கிறார். ஊடகங்கள் திரித்துப் போடுகின்றன. அவருக்கும் எனக்கும் எந்தவித மாறுபாடும் இல்லை.

சசிகலா முதலியவர்களைப் பற்றி கேட்கிறீர்கள். அது முடிந்துபோன கதை. எதிரிகளோடு சேர்ந்து தொடர்ந்து குழப்பத்தைச் செய்கிறார்கள். அவர்கள் போனதால்தான் ஒரு சதவீதம் கூடுதலாக வந்திருக்கிறது.

2019இல் நிலக்கோட்டை இடைத்தேர்தல் வந்தபோது அ.தி.மு.க. வேட்பாளர் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகள் பெறுகிறார். தமிழ்நாட்டு மக்கள் எந்தத் தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதில் விழிப்பாக இருக்கிறார்கள்.

2014 தேர்தலில் கோவையில் பா.ஜ.க. வேட்பாளர் சி.பி. இராதாகிருஷ்ணன் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றிவாய்ப்பை இழந்தார். அதைவிடக் குறைவாகத்தான் அண்ணாமலை இப்போது வாக்குகள் வாங்கியிருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என வரும்போது வாக்கு வித்தியாசம் மாறிமாறிதான் வரும்.

2019 சேலம் மக்களவைத் தொகுதியில் 8,209 வாக்குகள் குறைவு. அப்போது, பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருந்தன. அடுத்து சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க, தே.மு.தி.க. இல்லை. 94 ஆயிரம் வாக்குகளைப் பெற்றோம். 2024 தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க.தான் கூட்டணியில்... மற்ற அமைப்புகள் எல்லாம் குறைவுதான். இப்போது 46, 208 வாக்குகள் பெற்றிருக்கிறோம். ஆக சூழ்நிலைக்குத் தக்கவாறு வாக்களிப்பது இயல்பு. 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

அண்ணாமலை அ.தி.மு.க. மீது வைக்கும் கருத்துகளைப் பற்றிக் கேட்கிறீர்கள். இதைப் பற்றி அவரிடம்தான் கேட்கவேண்டும். எங்கள் கூட்டணியைவிட்டுப் போய்விட்டார். அவர் விலகிப்போய்விட்டு ஆதங்கங்களை வெளிப்படுத்துகிறார். அவர் என்னென்னவோ கனவு கண்டிருப்பார். அது நனவாகல. அந்த வருத்தத்தில வெறுப்புல இப்படிப்ப்பட்ட வார்த்தைகளை உதிர்த்துக்கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க. நல்ல தலைவர்களை வைத்திருந்தால் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. பல மாநிலங்களில் இந்த மாதிரியான நிலைமை இருக்கிற காரணத்தால், அதைச் சரிசெய்யாததால் சரிவு ஏற்பட்டிருக்கிறது.

அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி கொடுப்பார்களா என்பதைப் பற்றி யூகத்தின் அடிப்படையில் பதில்கூற முடியாது.

கடந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி இங்கும், சென்னையில் அளித்த பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளேன்.

எனக்கும் வேலுமணிக்கும் கருத்துமாறுபாடு என திரித்துக் கூறுகிறார்கள். வேண்டுமென்றே அ.தி.மு.க.வைப் பற்றி குழப்பத்தை உண்டாக்க ஊடகத்தில் செய்தி வரவைக்கிறார்கள். அமைச்சர் ரகுபதி போன்றவர்கள் அ.தி.மு.க.வைப் பற்றிப் பேச அருகதை இல்லை. அ.தி.மு.க. கரை வேட்டியைக் கட்டிக்கொண்டு அதை வைத்துக்கொண்டு தி.மு.க.வுக்குப் போனவர்.

தே.மு.தி.க. விருதுநகர் வேட்பாளர் விஜய பிரபாகர் வாக்கு பற்றி வழக்கு போடப்போவதாக என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க. நிர்வாகிகளே பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வேலைசெய்ததாகச் சொல்வது அவதூறு பிரச்சாரம். அப்படி இருந்தால் எப்படி இவ்வளவு வாக்குகள் வாங்கியிருக்க முடியும்?” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com