அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 01.07.2024 முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 53 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் 01.07.2024 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார்.
இதனால் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்து 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள். ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 1931 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.
எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.